கடந்த 2019-ல் தீபாவளி ரிலீஸ் ஆக வெளியானது கார்த்தி நடித்த கைதி திரைப்படம். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். ரொமான்ஸ், குத்துப்பாட்டு என எதுவுமே இல்லாமல் இரண்டரை மணி நேர படத்தை செம திரில்லிங்காக விறுவிறுப்பாக கொடுத்திருந்தார் லோகேஷ் கனகராஜ்.
ஒரே நாள் இரவில் நடக்கும் கதைகள் பல ஏற்கனவே வந்திருந்தாலும் இந்தப் படம் பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைத்து, படம் பார்க்க வைத்தது.. அதுவே இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது.
இந்த படம் தற்போது இந்தியில் ரீமேக்காகும் பணிகள் ஒருபக்கம் நடைபெற்று வருகின்றன. அதேசமயம் இந்த படம் ரஷ்ய மொழியில், வரும் மார்ச் 10ஆம் தேதி ரிலீஸாவதற்கு தயாராகி வருகிறது. இந்த படத்தை ரஷ்ய மொழிக்கு மாற்றும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கார்த்தியின் படம் ஒன்று முதன்முதலாக ரஷ்ய மொழி பேசப்போவது அவரது திரையுலக பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.















