V4UMEDIA
HomeNewsKollywoodஅமீர்-வெற்றிமாறன்-கரு.பழனியப்பன் கூட்டணியில் உருவாகும் ‘இறைவன் மிகப்பெரியவன்’

அமீர்-வெற்றிமாறன்-கரு.பழனியப்பன் கூட்டணியில் உருவாகும் ‘இறைவன் மிகப்பெரியவன்’

ராம், பருத்திவீரன் என மிகச்சிறந்த படங்களை ரசிகர்களுக்கு கொடுத்தவர் இயக்குனர் அமீர்.. அதன்பிறகு கடைசியாக ஜெயம் ரவியை வைத்து இயக்கிய ஆதிபகவன் படம் அவரது பெயர் சொல்லும்படியாக அமையவில்லை. இடையில் நடிகராக மாறிய அமீர், யோகி, வடசென்னை நாற்காலி ஆகிய படங்களில் நடித்தார்.

இந்தநிலையில் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார் அமீர். அவர் இயக்கவுள்ள படத்திற்கு இறைவன் மிகப்பெரியவன் என டைட்டில் வைக்கப்பட்டு நேற்று அதற்கான அறிமுக விழாவும் நடைபெற்றது.

இந்தப்படத்தின் கதையை இயக்குனர் வெற்றிமாறனும் கதாசிரியர் தங்கமும் இணைந்து எழுதியுள்ளனர். எப்போதுமே அமீர் படங்களின் வெற்றிகளுக்கு பக்கபலமாக இருந்து வரும் யுவன்சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். . ஜேஎஸ்எம் பிக்சர்ஸ் சார்பில் ஜாஃபர் இப்படத்தை தயாரிக்கிறார். இந்தப்படத்தில் இயக்குனர் கரு.பழனியப்பன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்கிற தகவல் மட்டுமே இப்போதைக்கு வெளியாகியுள்ளது.

இந்த அறிமுக விழாவில் இயக்குனர் கரு.பழனியப்பன் பேசும்போது, “இறைவன் பொதுவானவனா என தெரியாது ஆனால் மனிதன் அனைவருக்கும் பொதுவானவன் என்பதை ஒரு கலைஞன் சொல்ல வேண்டிய காலம் இது, அதை இந்தப்படம் செய்யும். இந்தக்காலத்தில் எதையுமே தவறாக புரிந்து கொள்ளும் பழக்கம் தான் அதிகம் இருக்கிறது. அந்தவகையில் இந்த டைட்டிலேயே ஏன் அமீரின் இறைவன் மிகப்பெரியவன் என்று சொல்கிறீர்கள் என  பிரச்சனை செய்வார்கள். ஆனால் வெற்றிமாறனை விட இப்படத்தை அமீர் செய்வது தான் சரி” என கூறினார்.

இயக்குனர் அமீர் பேசும்போது, “பாரதிராஜா சார் படம் செய்யும்போதே நிறைய கதைகளை வெளியில் வாங்கி செய்வார் ஆனால் எல்லோரும் அவர் கதை என நினைப்போம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் வேறொருவரின் கதையை செய்தால் சினிமாவில் கொஞ்சம் ஒரு மாதிரியாக பார்க்கும் பழக்கம் இருக்கிறது. அதை மாற்றலாம் என நானே துவங்கிய விஷயம் தான் இது” என கூறினார்.

வெற்றிமாறன் பேசும்போது, “கதாசிரியர் தங்கம் இந்த கதையை என்னிடம் சொன்னதுமே இதற்கு திரைக்கதை எழுதி முடித்துவிட்டேன். கதை எழுதும்போதே அமீரிடம் விவாதிப்பேன். இந்தப்படத்தை நான் எடுக்கவில்லை என்ற நிலை வந்தபோது, நான் வேண்டுமானால் இந்தப்படத்தை எடுக்கவா என அமீர் கேட்டார்..

என்னைவிட அவர் எடுத்தால் தான் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. திரைக்கதையில் சில மாற்றங்களை தனது வாழ்வியலில் இருந்து எடுத்து வந்து மாற்றம் செய்துள்ளார் அமீர்.. இன்றைய காலகட்ட பிரச்சனையை,  சரியான விசயங்களை சொல்ல வேண்டும் என்பது தான் நாங்கள் இணைந்து வேலை செய்ய காரணம்” என தங்களது கூட்டணி அமைந்ததற்கான காரணங்களை கூறினார் வெற்றிமாறன்….

Most Popular

Recent Comments