ஒருபக்கம் இயக்குனர், இன்னொரு பக்கம் தயாரிப்பாளர் என இரட்டை குதிரை சவாரி செய்துவருகிறார் இயக்குனர் பா.ரஞ்சித். அந்தவகையில் அவரது நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி என்கிற நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள குதிரைவால் படம் பற்றிய சுவாரஸ்யமான விஷயம் ஒன்றை சமீபத்தில் அதன் இசை வெளியீட்டு விழாவில் கேட்க முடிந்தது. .அதாவது அந்தப்படத்தின் இயக்குனருக்கும் (இரட்டை இயக்குனர்கள்) உதவி இயக்குனருக்கும், ஏன் ஹீரோவுக்கும் கூட ஒரேவிதமான சம்பளம் தான், அதுவும் மாத சம்பளம் தான் வழங்கப்பட்டதாம்.
அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லினோனல் ஜேசன் மற்றும் ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இயக்கியிருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுத்தாளர் ஜி.ராஜேஷ் குமார் எழுதியிருக்கிறார். கலையரசன் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அஞ்சலி பாட்டீல் நாயகியாக நடித்திருக்கிறார்.
இந்தப்படத்தை துவங்கி தயாரித்தது எல்லாமே யாழி நிறுவனத்தின் விக்னேஷ் சுந்தரேசன் தான்.. அதற்கு முன்னதாக இயக்குனர் மனோஜ் நீலம் புரொடக்சனை அணுகியபோது, தற்போதைய சூழலில் படத்தை தயாரிக்க உதவமுடியாத சூழலில் இருப்பதாக கூறிய இயக்குனர் பா.ரஞ்சித், வேறு விதமான உதவிகளை செய்வதாக வாக்களித்திருக்கிறார். வேறு சில தயாரிப்பாளர்களையும் கூட கைகட்டியுள்ளார். அந்தவிதமாக ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் விக்னேஷ் சுந்தரேசன் இந்தப்படத்தை தயாரிப்பதற்காகவே யாழி என்கிற நிறுவனத்தை துவங்கியுள்ளார்.
ஆனால் பொறுப்புகளை எல்லாம் இயக்குனர் மனோஜ் வசம் ஒப்படைத்துவிட்டாராம். அதனால் செலவுகளை பார்த்து பார்த்து பண்ணவேண்டிய பொறுப்பு தன்னிடம் வந்ததால், இயக்குனர்(கள்), உதவி இயக்குனர்கள், ஹீரோ உள்ளிட்ட அனைவருக்கும் ஒரே மாதிரியான மாத சம்பளம் பிக்ஸ் செய்து வழங்கி வந்ததாக அந்த நிகழ்வில் கூறினார்.. சிறிய பட்ஜெட்டில் படம் தயாரிக்க வருபவர்கள், இதேபோன்ற நடைமுறையை பின்பற்றினால் பொருளாதார சுமையையும் குறைக்கலாம்.. நஷ்டத்தையும் தவிர்க்கலாம் என்றே தோன்றுகிறது.