V4UMEDIA

போலீஸ் கான்ஸ்டபிள் மாரிமுத்துவின் மகனான விஷால் போலீஸ் வேலைக்கு முயற்சிக்கிறார் இதற்கிடையே அநியாயம் கண்டு பொங்கும் விஷாலை போலீஸ் வேலையை காரணம் காட்டி அவரது அப்பா அடக்கி வைக்கிறார்.

தனது தங்கை ரவீணாவை கட்டாயப்படுத்தி காதலிக்கச் சொல்லும் தெருப்பொறுக்கியை அடித்து எச்சரிக்கும் விஷால், தன் தங்கை காதலிக்கும் இளைஞனுக்கு அவளை திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்.

இன்னொரு பக்கம் எம்பி சீட் பெறுவதற்காக முயற்சி செய்யும் பாபுராஜ், தனது கம்பெனியில் வெளியாகும் கழிவுநீரை எதிர்த்து கம்பெனியை மூட சொல்லி போராட்டம் நடத்தி குடைச்சல் தரும் குமரவேலை வேறுவழியின்றி தீர்த்து கட்டுகிறார்.

தன்னை விரும்பாத விஷாலின் தங்கையை கடத்திச் செல்ல திட்டமிடுகிறான் ரவுடி இளைஞன். அதேபோல கல்லூரியில் தங்களை அவமானப்படுத்திய இளம்பெண்ணை கடத்திச் செல்ல திட்டமிடும் இன்னொரு கும்பல் தவறுதலாக விஷாலின் தங்கையை கடத்தி செல்கின்றது. அவர்களிடம் இருந்து தப்பிக்கும் விஷாலின் தங்கை பாபுராஜ் குமரவேலை கொலை செய்வதை நேரில் பார்த்து விடுகிறார்.. அதன் பிறகு என்ன நடக்கும் ?  அதேதான்.. விஷாலின் தங்கையும் கொல்லப்படுகிறார்.

கொலையாளி யார் என்பதை கண்டுபிடிப்பதில் போலீஸ் அலட்சியம் காட்டுவதால் தானே ஒவ்வொரு நுனியாக பிடித்து முன்னேறுகிறார் விஷால். தன்னை கண்டுபிடிக்கமுடியாதபடி காய்களை நகர்த்துகிறார் பாபுராஜ். இதற்கடுத்து இந்த பேராபத்து கும்பலுடன் மோதும் விஷாலின் வீரம் வாகை சூடியதா என்பதே மீதிக்கத்தை.

போலீஸ் வேலைக்காக எந்த வம்புக்கும் போகாமல் அமைதிகாக்கும் ‘தில்’லான இளைஞர் கதாபாத்திரம் தமிழ் சினிமாவுக்கு புதுசு இல்லை… என்றாலும் அதை விஷால் மாதிரியான ஆக்ஷன் ஹீரோ பண்ணும்போது பார்ப்பதற்கு சுவாரசியமாகத்தான் இருக்கிறது. இடைவேளைக்கு பிறகு எதிரிகளை அவர் ஒவ்வொரு ஸ்டெப்பாக நெருங்குவது செம விறுவிறுப்பு..

விஷாலுக்கு என உருவாக்கப்பட்ட ரெடிமேட் காதலியாக டிம்பிள் ஹயாத்தி. காதல் காட்சிகளை விட, விஷாலுக்கும் அவரது பெற்றோருக்கு ஆறுதல் சொல்லவே அதிகம் பயன்பட்டிருக்கிறார் டிம்பிள்.

நீண்ட நாளைக்கு பிறகு  தமிழுக்கு வந்திருக்கிறார் மலையாள வில்லன் நடிகர் பாபுராஜ்.. வழக்கமான ரவுடி கம் அரசியல்வாதி கேரக்டருக்கு சரியான பொருத்தமான தேர்வு. விஷாலின் தங்கையாக ரவீனா ரவி.. துடுக்குத்தனம் நிறைந்த பக்கத்து வீட்டு பெண் போல பளிச்சிடுகிறார்.

விஷாலை மட்டுமல்ல விஷாலின் தந்தையை கூட கலாய்க்கும் யோகிபாபுவின் வழக்கமான காமெடி ஒரு சில இடங்களில் மட்டும் உதடுகளை திறக்க வைக்கிறது.

விஷாலின் அப்பாவாக மாரிமுத்து மகனின் எதிர்காலத்திற்காக பதைபதைக்கும் ஒரு சராசரி தந்தையையும் காவல் துறையிலே ஏவல் செய்து பழக்கப்பட்டு போன சாதாரண போலீஸ்காரரை  தன் நடிப்பால் நம் கண்முன் நிறுத்துகிறார்.

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை இடைவேளைக்குப்பின் படத்தின் வேகத்தை கூட்ட உதவியிருக்கிறது. அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இந்த படத்தை பக்கா ஆக்சன் படமாக தர முயற்சித்திருக்கிறார். இன்னும் இருபது நிமிட காட்சிகளை குறிப்பாக இடைவேளைக்கு முந்தைய காட்சிகளில் நீளத்தை குறைத்திருந்தால் இன்னும் விறுவிறுப்பு கூடியிருக்கும்..

அதேபோல அரை மணி நேரத்திற்குள் வெவ்வேறுவிதமான ஆறு கொலையாளிகளுக்கு அக்கவுண்ட் மூலம் பணம் கை மாறுவது என்பதும் அழிந்துபோன ஆடியோவை கண்டுபிடிக்கும் ஹேக்கர் இளைஞன் அதை சொல்வதற்காக விஷாலை தேடிக்கொண்டு அந்த நடுநிசி நேரத்தில் மருத்துவமனைக்கே தேடி வருவதும் காதில் சுற்றப்பட்ட கனகாம்பர பூ. இடைவேளை வரையிலான வழக்கமான கிளிசே காட்சிகளை கொஞ்சம் பொறுமையாக சகித்துக் கொண்டால் இடைவேளைக்குப்பிறகு உங்களிடம் பிராயச்சித்தம் தேடிக் கொள்கிறார்கள் விஷாலும் இயக்குனர் து.ப சரவணனும்.

V4UMEDIA