நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்கிற கேள்விக்கு இப்போதைக்கு விடை கிடைக்காமல் இருக்கலாம்.. ஆனால் அவரது அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் தேர்தல் அரசியலில் ஏற்கனவே இறங்கிவிட்டது.
பின்னாளில் விஜய் நேரடி அரசியலில் நுழைந்தால் அவர் நடந்து வருவதற்கான வெற்றிப்பாதையை இப்போதே போட்டுவைக்க துவங்கி விட்டனர். அந்தவகையில் எல்லா அரசியல் கட்சிகளும் விஜய் மீதும் அவரது ரசிகர் மன்றத்தினர் மீதும் ஒரு பார்வையை வைத்தே உள்ளனர்.
அந்தவகையில் நேற்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, விஜய்யின் வீட்டிற்கே சென்று அவரை சந்தித்து பேசியுள்ள நிகழ்வு திரையுலகில் மட்டுமல்லாது, அரசியல் அரங்கிலும் ஆச்சர்யத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
கிழக்கு கடற்கரை சாலையில் விஜய் வசிக்கும் பனையூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்திருந்த முதல்வர் ரங்கசாமி விஜய்யின் வீடும் அங்கே தான் இருக்கிறது என்பதை கேள்விப்பட்டு அவரை பார்க்க விரும்பியுள்ளார்.
இந்த தகவல் தெரிய வந்ததும் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முதல்வர் ரங்கசாமி மற்றும் விஜய் இருவருக்குமான சந்திப்பை ஏற்பாடு செய்தார். இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றன.
இந்த சந்திப்பின்போது கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் இருவரும் பேசியதாக தெரிகிறது. இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றே விஜய் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.