ஹீரோக்கள், இயக்குனர்களின் பெயர்களை வைத்து படங்களை அடையாளம் சொல்லி வந்த நிலையில் ஒரு தயாரிப்பாளரின் பெயரைச் சொல்லி, அவரது படம் என சொல்ல வைத்தவர்கள் வெகுசிலரே. அதில் ஒருவர்தான் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன். பிரம்மாண்டமான படங்களின் இயக்குனர் என்று இன்று இந்திய சினிமாவே போற்றும் ஷங்கரை தனது ஜென்டில்மேன் படத்தில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான். அதுமட்டுமல்ல சரத்குமார், பிரபுதேவா, அப்பாஸ் என பலரது ஆரம்பகட்ட வளர்ச்சியில் துணை நின்றவர் கேடி குஞ்சுமோன்
தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களை தயாரித்து வந்த குஞ்சுமோன் ஒருகட்டத்தில் திரையுலகை விட்டு கொஞ்சம் ஒதுங்கினார். ஒரு இடைவெளிக்கு பிறகு தற்போது தனது வெற்றிப் படமான ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் கே.டி.குஞ்சுமோன்.
இந்த படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு எதுவுமே இன்னும் வெளியாகாத நிலையில், தற்போது இந்த படத்தின் இசை அமைப்பாளர் யார் என கண்டுபிடியுங்கள் என்று ஒரு சிறப்பு பரிசு போட்டியை அறிவித்திருந்தார் கே.டி.குஞ்சுமோன்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் ஆரம்ப காலகட்டத்தில் ஜென்டில்மேன், காதலன், காதலர் தினம் என அவரது இசை பயணத்தில் வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்றவர் என்பதால் ஒருவேளை அந்த நட்பின் அடிப்படையில் அவரை இசை அமைப்பாரா ? அல்லது புதியவர் ஒருவரை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்துவாரா? அல்லது தற்போது இருக்கும் வேறு இசை அமைப்பாளர்கள் யாரேனும் இசை அமைப்பார்களா ? என ரசிகர்கள் சோசியல் மீடியாவில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள்.
இந்நிலையில் பாகுபலி போன்ற பிரமாண்ட படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இப்படத்திற்கு இசையமைக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார். விரைவில் வெளியாகவுள்ள ஆர்ஆர்ஆர் படத்திற்கு இவர்தான் இசையமைத்துள்ளார்.
படத்தின் முதல் அறிவிப்பாக படத்தின் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது இதுதான் முதன்முறையாக இருக்கும்..