தமிழ் திரையுலகில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் சின்மயி. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு மீ டூ என்கிற பிரச்சாரம் மூலமாக திரையுலகில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து அவ்வப்போது சிலர் மீது அது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
சமீபத்தில் இயக்குனர் சுசி கணேசன் வஞ்சம் தீர்த்தாயடா என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பு சுசி கணேசன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியவர் இயக்குனர் லீனா மணிமேகலை. அவருக்கு ஆதரவாக அப்போது சின்மயியும் கருத்து தெரிவித்தார்.
இந்தநிலையில் இப்படி ஒரு குற்றச்சாட்டுக்கு ஆளான சுசிகணேசன் பற்றி தெரிந்திருந்தும் இளையராஜா எப்படி அவர் படத்திற்கு இசையமைக்கிறார் என்பது போன்று சமீபத்தில் சின்மயி ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். அதேபோல லீனா மணிமேகலையும் இது குறித்து தனது கருத்தை தெரிவித்திருந்தார்.
சோசியல் மீடியாவிலும் வலைத்தளங்களிலும் சுசி கணேசன் குறித்த இந்த கருத்துக்கள் வேகமாக பரவின.
ஏற்கனவே சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் லீனா மணிமேகலை மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்திருந்தார் சுசி கணேசன். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் லீனா மணிமேகலை மற்றும் சின்மயி இருவர் மீது வழக்கு தொடுத்துள்ளார் சுசிகணேசன்.
லீனா மணிமேகலை மற்றும் சின்மயி இருவரும் தன்மீது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்களை, அவதூறு கருத்துக்களை தொடர்ந்து வெளியிடுவதால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது என்றும் அவர்கள் தன்னைப் பற்றி அவதூறு கருத்துக்களை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதை விசாரித்த நீதிமன்றம், லீலா மணிமேகலை மற்றும் சின்மயி ஆகியோர் இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இனி வெளியிடக்கூடாது என்று இவர்களுக்கும் இவர்கள் தவிர சமூக வலைதளங்கள் செய்தி ஊடகங்கள் ஆகியவற்றுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.