கடந்தசில மாதங்களுக்கு முன் சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற படம் ஜெய்பீம்.. இந்தப்படத்தில் மலைவாழ் மக்களின் வாழ்க்கை கண்ணீர் விட வைத்தது என்றால் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட காட்சிகளில் அனல் பறந்தது. பாதிக்கப்பட்ட தரப்பின் வழக்கறிஞரான சூர்யாவுக்கு எதிராக அரசு தரப்பு வழக்கறிஞராக நடித்திருந்த தெலுங்கு ராவ் ரமேஷ் நீதிமன்றத்தில் வாதாடும் காட்சிகள் இருக்கை நுனிக்கு ரசிகர்களை அழைத்து வந்தன.

தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே தனக்கு இவ்வளவு வரவேற்பா என பிரமித்து போயிருக்கும் ராவ் ரமேஷ்., தெலுங்கில் நானூறு படங்களுக்கு மேல் நடித்த பிரபல வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான ராவ் கோபால் ராவின் மகன் தான் .

தெலுங்கில் கிட்டத்தட்ட 120 படங்களுக்கு மேல் அத்தனை முன்னணி ஹீரோக்களுடனும் பலதரப்பட்ட குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள இவர் நடிக்க வந்ததே ஆச்சர்யமான ஒன்றுதான்.. காரணம் இவர் போக விரும்பிய பாதை டைரக்சன் பக்கம் இருந்தது.
தனது அம்மாவிடம் இயக்குநராகும் ஆசையைச் சொன்னபொது, “உன்னை நம்பி யார் படம் கொடுப்பார்கள்..? அதற்கு நிறைய அனுபவம் வேண்டும். நீ மற்றவர்களை நடிக்க வைக்க வேண்டும் என்றால் நீ முதலில் நடிப்பைப் பற்றி புரிந்துகொள்ள வேண்டும். அதை முதலில் கற்றுக்கொள்” என கூறியுள்ளார். அதுவும் சரிதான், இல்லையில்லை அதுதான் சரி என நடிப்பு பக்கம் கவனத்தை திருப்பியவர் இன்று முழு நேர நடிகராக மாறிவிட்டார்.

தமிழில் நுழையும்போதே சூர்யா படத்தில் நடித்தது மட்டுமல்லாமல் அவருடன் சேர்ந்து நடித்ததில் பெருமைப்படுகிறேன்.. செட்டில் அவர் பற்றி பிறர் சொல்ல கேள்விப்பட்டபோது மலைத்துப் போனேன். அவர் நடத்தி வரும் அகரம் பவுண்டேஷன் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்பது மட்டுமல்லாமல் வெளிநாட்டிலும் உயர் கல்வி பெறுகிறார்கள் என்றபோது பிரமிப்பாக இருந்தது. என்கிறார் ராவ் ரமேஷ்.
இன்னொரு ஆச்சர்யமான விஷயம் ராவ் ரமேஷ் வளர்ந்தது முழுக்க சென்னையில் தான். தி.நகர் ராமகிருஷ்ணாவில் தான் பள்ளிக்கல்வி படித்துள்ளார். அதனால் பிறமொழி கலப்பு இல்லாமல் சுத்தமாகவும் தமிழ் பேச முடியும். அதனால் தான் ஜெய் பீம் படத்தில் அவரே டப்பிங்கும் எளிதாக பேசமுடிந்தது. ஜெய் பீம் பார்த்துவிட்டு பெரிய இயக்குனர்கள் பேசி இருக்கிறார்களாம்.. விரைவில் நல்ல செய்தியை அவரிடம் இருந்து எதிர்பார்க்கலாம்.