நடிப்பு மட்டுமின்றி துப்பாக்கி சுடுதல், ஏரோ மாடலிங், பைக் ரேஸ், கார் ரேஸ் என்று பலவற்றிலும் தனது திறமையை நிரூபித்து வருகிறார் அஜித்குமார். பைக் ரேஸராக வரவேண்டும் என்று விரும்பி அதிலேயே சில காலங்கள் முழுமையாக தன்னை ஈடுபடுத்தி வந்த அஜித்குமார், பின்னர் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

சினிமாவில் முன்னணி நடிகராக நடித்து வந்தாலும் கூட இப்போதும் அவர் துப்பாக்கி சுடுதல், ஏரோ மாடலிங், கார் ரேஸ், பைக் ரேஸ் என்று எதையும் விடுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் ஓய்வு நேரத்தில் தான் அவர் சினிமாவில் நடிக்கிறார் என்று தெரிகிறது. அந்த அளவுக்கு அவர் மற்ற துறைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

வலிமை படத்தில் நடித்து வரும் அஜித் குமார் தற்போது ரஷ்யாவில் தங்கியிருக்கிறார். அங்கே நாட்டில் 5 ஆயிரம் கிலோ மீட்டர் டூவீலர் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அதற்கான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. பைக்ரேஸ் உடையுடன் அஜித் பைக்கில் அமர்ந்து இருக்கும் புகைப்படங்களை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ரஷ்யாவில் 5 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செல்ல இருக்கும் அஜித்குமார் முன்னதாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் 10 ஆயிரத்து 800 கிலோமீட்டர் பைக் பயணம் சென்றிருந்தார். இதையடுத்து அவர் உலகம் முழுவதும் பைக்கிலேயே வலம் வர திட்டமிட்டிருக்கிறார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்லி வருகின்றனர்.