தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் (தே.மு.தி.க.) தலைவர் விஜயகாந்த், சிகிச்சைக்காக விமானம் மூலம் இன்று துபாய் புறப்பட்டு சென்றார்.
இன்று அதிகாலை 4 மணிக்கு விஜயகாந்த் அமெரிக்கா செல்வதாக தகவல் வெளியானது. ஆனால், அதிகாலை விமானத்தில் அவர் பயணிக்கவில்லை. சென்னை விமான நிலையத்திற்கு சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்ட அவர், துபாய்க்கு புறப்பட்டு சென்றார். விஜயகாந்த்துடன் அவரது இளைய மகன் சண்முகப்பாண்டியனும், உதவியாளர்கள் இருவரும் சென்றனர்.

லண்டனைச் சேர்ந்த பிரபல மருத்துவர் ஒருவர் அவருக்கு நடைபயிற்சி, பேச்சுப் பயிற்சி கொடுப்பதற்காக துபாய் வருகிறார். அங்கு விஜயகாந்த்துக்கு மருத்துவப் பரிசோதனை செய்த பின், சிகிச்சையை துபாயில் அளிப்பதா இல்லை லண்டன் அழைத்துச் செல்வதா என முடிவு செய்யப்பட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறின.
கடந்த சில வருடங்களுக்கு முன் தைராய்டு பிரச்னை, தொண்டையில் தொற்று, சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகளால் விஜயகாந்த்தின் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடல் நலக் கோளாறுகளுக்காக சிங்கப்பூரில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். பின்னர் அவர், அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.