நடிகர் சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் இரண்டாம் பார்வை போஸ்டர் வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.
நடிகர் சிம்பு தற்போது ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்து வருகிறார். வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை கௌதம் மேனன் இயக்குகிறார்.
தயாரிப்பாளர் சங்கத்துடன் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சிம்புவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு இந்தப் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நேற்று முதல் மீண்டும் துவங்கியது.
ஜெயமோகன் இந்தப் படத்துக்கு கதை எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்கிறார். கௌதம் மேனனின் சகோதரி உத்தாரா மேனன் இந்தப் படத்துக்கு ஆடை வடிவமைப்பு பணிகளை மேற்கொள்கிறார்.
இந்தப் படத்துக்காக நடிகர் சிம்பு சுமார் 15 கிலோ எடை குறைந்து ஒல்லியாக காணப்பட்டார். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தது.
இந்த நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் கட்ட போஸ்டரை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. போஸ்டரில் இருட்டான அறையில் நடிகர் சிம்புவும் தொழிலாளர்களுடன் படுத்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.