திரையரங்கம் திறக்க அனுமதி அளித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இயக்குநர் இமயம் பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார்.
திரையரங்க உரிமையாளர்களின் நஷ்டத்தை புரிந்து கொண்டு முதல்வர் திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்துள்ளதாக புகழாரம் சூட்டியுள்ளார்.
கரோனா இரண்டாவது அலையால் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. தற்போது கரோனா பரவல் குறைந்து வருவதன் எதிரொலியாக தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் திரையரங்குகள் 50 சதவிகித பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
”வணக்கம். திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எங்கள் நன்றிகள்! கடந்த இரண்டு ஆண்டுகளை திரையுலகின் கருப்பு நாட்களாக்கி விட்டது இந்த கரோனா.
படப்பிடிப்பு, புதிய திரைப்படங்கள் வெளியீடு என எல்லாம் பெருமளவில் முடங்கிவிட்டது.
நிச்சயமற்ற எதிர்காலத்தில் நம்பிக்கை பூக்குமா என்ற கேள்விக் குறியோடு நகர்ந்த நாட்களில் இப்போது திரையரங்குகளை 50% இருக்கைகளோடு திறந்துகொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் விதைக்கிறது.
ஆக்கிரமித்திருக்கும் நோய் விலகி, பல புதிய திரைப்படங்கள் வெளியாகி, திரையரங்குகள் முழுமையான திருவிழாக் கோலம் காண காத்திருக்கிறோம். இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள முதல்வருக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.