ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் கங்கை அமரன் இணைந்துள்ளார்.
இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் புதிய படத்தில் நடித்து வருகிறார். ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். பிரகாஷ் ராஜ், ராதிகா, யோகிபாபு, தலைவாசல் விஜய், ராஜேஷ், இமான் அண்ணாச்சி, ‘குக் வித் கோமாளி’ புகழ், அபிராமி அம்மு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
டிரம்ஸ்டிக் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் துவங்கியது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அருண் விஜய்க்கு படப்பிடிப்பின் போது சிறிது காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்தப் படத்தில் இசையமைப்பாளர் இயக்குனர் நடிகர் என பன்முகத்திறமை கொண்ட கங்கை அமரன் இணைந்துள்ளார். இதன் மூலம் 8 ஆண்டுகளுக்குப் பிறகு கங்கை அமரன் மீண்டும் நடிப்பில் களமிறங்கியுள்ளார். கடைசியாக 2013-ம் ஆண்டு வெளியான ஆர்யா சூர்யா என்ற படத்தில் கங்கை அமரன் நடித்திருந்தார். தற்போது 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் இணைந்துள்ளார். கங்கை அமரன், ஹரி, ராஜேஷ், இமான் ஆகியோர் இடம் பெற்ற படப்பிடிப்புத் தள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.