மம்முட்டி நடிப்பில் வெளியான ஒன் திரைப்படம் தமிழிலும் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
மலையாள நடிகர் மம்முட்டி நடிப்பில் ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு யாத்ரா என்ற பெயரில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து மம்முட்டி கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒன் என்ற படத்திலும் நடித்துள்ளார்.
சந்தோஷ் விஸ்வநாத் என்பவர் இயக்கத்தில் உருவான அந்தப் படத்தில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்திருந்தார். சீனிவாசன், ஜோஜோ ஜார்ஜ், உன்னி கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் அப்படத்தில் நடித்திருந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான அப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2021/08/mammootty-s-one-to-hit-the-theatres-in-february-1610475910.jpg)
இந்நிலையில் ஒன் திரைப்படம் தமிழிலும் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் ஒன் படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமைகளைப் பெற்றுள்ளனராம். தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்பட்டவுடன் அப்படம் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் அந்தப் படத்தின் தமிழ்த் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கலைஞர் தொலைக்காட்சி பெற்றிருக்கிறதாம்.