சிம்பு நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் கன்னட நடிகை கயது லோகர் கதாநாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
மாநாடு படத்தை முடித்துள்ள சிம்பு தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். படத்திற்கு ஜெயமோகன் எழுத்தாளராக இணைந்துள்ளார். நடிகை ராதிகா இந்தப் படத்தில் சிம்புவின் அம்மாவாக நடிக்கிறார்.
சில தினங்களுக்கு முன்பு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது கன்னட நடிகை கயது லோகர் இந்தப் படத்தில் கதாநாயகியாக இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் கன்னடத் திரைப்படமான ‘முகில் பேட்’ மற்றும் மலையாளப் படமான ‘பதோன் பாட்டம் நூட்டுண்டு’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் அவர் தமிழில் என்ட்ரி கொடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூர் பகுதியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சிம்பு இந்தப் படத்திற்காக தீவிர உடற்பயிற்சி செய்து 15 கிலோ வரை எடையைக் குறைத்துள்ளராம். சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் புகைப்படம் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.