இயக்குனர் சீனு ராமசாமி மற்றும் ஜிவி பிரகாஷ் கூட்டணி அமைக்கும் புதிய படத்தில் நடிகை காயத்ரி இணைந்துள்ளார்.
இசையமைப்பாளராக மக்கள் மனதில் இடம் பிடித்த ஜிவி பிரகாஷ் தற்போது நடிகராகவும் முன்னேறி வருகிறார். இந்நிலையில் ஜிவி பிரகாஷ் தனது அடுத்த படத்தில் இயக்குனர் சீனு ராமசாமியுடன் கூட்டணி அமைக்க உள்ளார். தற்போது நடிகை காயத்ரி இந்தப் படத்தில் கதாநாயகியாக இணைந்துள்ளார்

இந்தப் படத்தில் காயத்ரி ஆண்டிபட்டியைச் சேர்ந்த நர்ஸ் ஆக நடிக்க இருப்பதாகவும் ஜிவி பிரகாஷ் இறைச்சி கடை நடத்துபவராகவும் நடிக்கின்றனராம். ஸ்கைமேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் கலைமகன் முபாரக் இந்தப் படத்தை தயாரிக்கிறார். என்ஆர் ரகுநாதன் என்பவர் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.
இந்தப் படம் குறித்து பேசிய இயக்குனர் சீனுராமசாமி “எனக்கு ஒரே நேரத்தில் பள்ளி மாணவியாகவும், வேலை செய்யும் பெண்ணாகவும், அம்மாவும் மூன்று தோற்றங்களுக்கும் பொருத்தமாக இருக்கும் நடிகை தேவைப்பட்டது. நங்கள் அதற்காக பல புதிய முகங்களையும் ஆடிஷன் செய்தோம். அதன் பிறகு தான் எனக்குப் புரிந்தது நடிகை காயத்ரி தான் இந்தக் கதாபாத்திரத்தைச் செய்வதற்கு சிறந்தவர். அவர் இந்தக் கதாபாத்திரங்களில் நடிப்பார் என்பதையும் மீறி நன்றாக பொருத்துவார். அவருடைய கதாபாத்திரம் இந்தப் படத்தில் நன்றாக பேசப்படும்” என்று தெரிவித்துள்ளார்
சீனுராமசாமி கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் ‘மாமனிதன்’ படத்தை இயக்கி உள்ளார். அந்தப் படத்திலும் நடிகை காயத்ரி விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். அந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.