நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு மொழி, நாட்டை கடந்து ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக ஜப்பான் நாட்டில் ரஜினிக்கு ரசிகர்கள் அதிகம். முத்து படத்தில் தொடங்கியது ரஜினியின் ஜப்பான் அலை. அந்தப் படத்தில் இடம்பெற்ற, தில்லானா தில்லானா நீ தித்திக்கும் தேனா பாடலில், ரஜினியின் நடனத்தில் மயங்கிப் போன ஜப்பானியர்கள் ரஜினிக்கு டான்ஸ் மகாராஜா என்ற பட்டத்தை அளித்தனர்.
ரஜினியின் படங்கள் ஜப்பானில் தொடர்ந்து வெளியாகி பெரிய வெற்றி பெற்று வருகின்றன. ரஜினியின் ரசிகர்களான ஜப்பானியர்கள் தமிழகம் வந்து ரஜினியை சந்தித்த நிகழ்வும் நடந்தது. ரஜினியின் தர்பார் படம் வெளியான போது, ஒரு ஜப்பானிய ரசிகர் படத்தைப் பார்ப்பதற்காகவே ஜப்பானிலிருந்து சென்னை வந்தார். சரளமாக தமிழில் பேசி ஆச்சர்யம் அளித்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படம் கடந்த வாரம் ஜப்பானில் வெளியானது. ஜப்பானில் உள்ள தமிழர்களுடன், ரஜினியின் ஜப்பானிய ரசிகர்களும் தர்பார் வெளியானதை கொண்டாடி வருகின்றனர்.
படம் வெளியாகி ஒருவாரம் ஆன நிலையில், ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஜப்பானின் கியோட்டோ, நகோயா, நிகிட்டா ஆகிய பகுதிகளில் தர்பார் கூடுதலாக திரையிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு படமொன்றுக்கு, வெளியான ஒரு வாரம் கழித்து திரையரங்குகளை அதிகரிப்பது சாதனை. அதனை ரஜினி சாதித்திருக்கிறார்.