கொரோனா முதல் அலையிலும் இரண்டாவது அலையிலும் பல்வேறு துறையினரும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் திரைத்துறையினரும் அதிகம் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கின்றனர். பல கலைஞர்கள் தங்களது வாழ்வாதாரத்தினை இழந்து தவித்து வருகின்றனர்.
ஊரடங்கிலும் பெரிய நட்சத்திரங்களுக்கு எந்த பிரச்சனையுமில்லை என்றாலும் தின சம்பளத்தில் வேலை செய்யும் கலைஞர்கள் பெரும் திண்டாட்டங்களுக்கு ஆளாகி இருக்கின்றனர். திரைப்பட படப்பிடிப்புகளுக்கு அனுமதி தந்தாலும், தியேட்டர்கள், மேடை கச்சேரிகளுக்கு அனுமதி அளித்தால்தான் இசைக்கலைஞர்கள் வாழ்வு மீண்டும் மலரும்.

பிரபல கலைஞர்கள் பலரும் நலிவுற்ற கலைஞர்களுக்கு உதவி புரிந்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல பின்னணி பாடகர் மனோ, கொரோனா இரண்டாவது அலையில் வேலை இல்லாமல் பாதிப்பிற்கு ஆளாகி இருக்கும் 200 இசைக்கலைஞர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுதிப்பினை அளித்து உதவியிருக்கிறார்.