தனுஷ் மற்றும் சாய்பல்லவி நடிப்பில் வெளியான ரவுடி பேபி பாடல் தற்போது புதிய சாதனையைப் படைத்துள்ளது.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் சாய்பல்லவி நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு ‘மாரி 2’ திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் தற்போது வரை பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
ரவுடி பேபி பாடல் வெளியான போதே தமிழக ரசிகர்களால் அந்தப் பாடல் கொண்டாடப்பட்டது. பிரபுதேவாவின் நடன இயக்கம், யுவனின் இசை, தீயின் குரல் தனுஷ் மற்றும் சாய்பல்லவியின் துடிப்பான நடனம் என பாடல் அனைத்து வகைகளிலும் அருமையாக அமைந்திருந்தது.
போகப்போக இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாமல் சர்வதேச ரசிகர்களையும் ரவுடி பேபி பாடல் கவர ஆரம்பித்தது. எனவே அந்தப் பாடலுக்கு அதிக பார்வைகள் கிடைக்க ஆரம்பித்தன. பின்னர் 100 கோடி பார்வைகளைப் பெற்ற முதல் தென்னிந்திய பாடல் என்ற சாதனையைப் படைத்தது ரவுடி பேபி பாடல்.
தற்போது ரவுடி பேபி பாடல் மேலும் ஒரு சாதனை படைத்துள்ளது. ரவுடி பேபி பாடலுக்கு யூடியூபில் ஐந்து மில்லியன் லைக்குகள் கிடைத்துள்ளது/ 5 மில்லியன் லைக்குகள் பெற்ற முதல் தென்னிந்தியப் பாடல் என்ற சாதனையை ரவுடி பேபி பாடல் படைத்துள்ளது. தற்போது ரவுடி பேபி பாடலுக்கு 118 கோடி பார்வைகள் கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.