ரன்வீர் சிங், ஆலியா பட் நடிப்பில் ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் படம் இயக்கவுள்ளார் கரண் ஜோஹர்.
1998- குச் குச் ஹோதா ஹை படத்தில் இயக்குநராக அறிமுகமானார் கரண் ஜோஹர். தயாரிப்பாளர் யாஷ் ஜோஹரின் மகன். கபி குஷி கபி கம், கபி அல்விடா நா கெஹ்னா, மை நேம் ஈஸ் கான் ஸ்டூடண் ஆஃப் தி இயர், பாம்பே டாக்கீஸ், ஏ தில் ஹை முஷ்கில் ஆகிய படங்களை இயக்கி புகழ் பெற்றார். ஓடிடிக்காக லஸ்ட் ஸ்டோரீஸ், கோஸ்ட் ஸ்டோரீஸ் படங்களில் தலா ஒரு பகுதியை இயக்கினார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகப் பணியாற்றிய கரண் ஜோஹர், பல படங்களைத் தயாரித்துள்ளார்.
கடைசியாக 2016-ல் படம் இயக்கிய கரண் ஜோஹர், ஐந்து வருடங்களுக்குப் பிறகு தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.
ரன்வீர் சிங், ஆலியா பட் நடிக்கும் ராக்கி ஆர் ராணி கி பிரேம் கஹானி என்கிற படத்தை கரண் ஜோஹர் இயக்குகிறார். ரன்வீர் சிங்கின் பிறந்த நாளான இன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2022-ல் படம் வெளியாகவுள்ளது.