தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் மூன்றாம் அலை வருவதற்குள் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திட தமிழக அரசு தீவிரம் காட்டிவருகிறது. அதன் ஒரு பகுதியாக, முகாம்களை அமைத்து மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை அரசு மேற்கொண்டு வருகிறது.
மக்கள் தற்போது தடுப்பூசியின் முக்கியத்துவத்தை உணர்ந்து வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்திக் கொள்கிறார்கள்.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சியுடன் இணைந்து நடிகர் சூர்யா படக்குழுவினருக்குக்காக தடுப்பூசி முகாமை ஏற்பாடு செய்துள்ளார். வரும் 6 மற்றும் 7ம் தேதி தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தனது 2டி நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்காக இந்த ஏற்பாட்டை செய்துள்ளார். தற்போது 2டி நிறுவனம் தயாரிப்பில் நான்கு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. மற்ற சில படங்களுக்கான வேலைகளும் நடைபெற்று வரும் நிலையில் இந்த முகாம் மூலமாக 350 பேர் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.