ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் ஓடிடி-யில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். பசுபதி, சஞ்சனா நடராஜன், காளி வெங்கட், தங்கதுரை உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
80-களில் வடசென்னை பகுதிகளின் இரு பிரிவினருக்கிடையே நடக்கும் குத்துச் சண்டைக் கலாச்சாரத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. சார்பட்டா படத்திற்கு தமிழகத்தில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆர்யாவின் மார்க்கெட்டை இப்படம் உயர்த்தும் என்றும் கோலிவுட் சினிமா வட்டாரங்கள் கூறி வருகின்றன.
ஏப்ரல் மாதம் இந்தப் படம் ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது சார்பட்டா படத்தை அமேசான் ப்ரைம் நிறுவனம் பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாகம். எனவே சார்பட்டா பரம்பரை திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாக இருப்பது உறுதியாகியுள்ளது. ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.