சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. பல மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டர் 100 ரூபாயை கடந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.49க்கும், ஒரு லிட்டர் டீசல் லிட்டர் ரூ.93.46க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து 99.80 ரூபாய்க்கு, டீசல் விலை லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்து 93.72 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த பாதிப்பை சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.