போலி ட்விட்டர் கணக்கு உருவாக்கி சிலர் தனது பெயரில் அவதூறு பரப்பி வருவதாக நடிகர் செந்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வரும் நடிகர் செந்தில், ஜெயலலிதா இருந்த போது அதிமுகவில் இருந்தார். அவரது மறைவுக்குப் பிறகு அமமுகவுக்கு சென்றார். இதைத்தொடர்ந்து, அண்மையில் பாஜகவில் இணைந்தார். டாஸ்மாக் கடை திறப்புக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலத்தில், நடிகர் செந்தில் தமிழக அரசை கண்டிப்பது போன்ற பதிவு ட்விட்டரில் உலா வந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த செந்தில், ட்விட்டர் பக்கத்தில் போலி கணக்கு உருவாக்கி தான் தமிழக அரசுக்கு எதிராக பதிவுகளை வெளியிடுவது போல சிலர் அவதூறு பரப்பி வருவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரில், முதல்வருக்கு எதிராக அவதூறு கருத்தை தான் பதிவிட்டதைப் போல எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ள விஷக்கிருமிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ட்விட்டரில் உலா வரும் அந்த பதிவுகளை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.