உலக டெஸ்ட் பைனலுக்கு தயாராகும் விதமாக இந்திய வீரர்கள் பயிற்சி போட்டியில் விளையாடுகின்றனர்.
இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் பைனல், இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. சவுத்தாம்ப்டனில் தனிமைப்படுத்திக் கொண்ட இந்திய வீரர்கள், 5 நாட்களுக்கு பின் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று, உலக டெஸ்ட் பைனலுக்கு தயாராகும் வகையில் இந்திய வீரர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து, நான்கு நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகின்றனர். இதில் கோஹ்லி தலைமையிலான ஒரு அணியும், ரகானே வழிநடத்தும் மற்றொரு அணியும் மோதுகின்றன. இதற்கான புகைப்படத்தை இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதில் ஷமி, சிராஜ் பந்துவீசும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இதேபோல புஜாரா, சுப்மன் கில் ‘பேட்டிங்’ செய்யும் புகைப்படம் உள்ளன.
உலக டெஸ்ட் பைனலுக்கு முன், நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ஆனால் இந்திய அணிக்கு எவ்வித போட்டிகளும் இல்லை. எனவே இப்பயிற்சிபோட்டி பைனலுக்கு சிறப்பான முறையில் தயாராக இந்திய வீரர்களுக்கு உதவலாம்.