தமிழ்த் திரையுலகில் உள்ள முக்கிய சினிமா குடும்பத்தினரில் ஜெயம் ரவி குடும்பமும் ஒன்று. அவருடைய அப்பா எடிட்டர் மோகன் பல படங்களுக்கு எடிட்டராகவும், சில படங்களைத் தயாரித்த தயாரிப்பாளராகவும் இருக்கிறார். அண்ணன் மோகன் ராஜா தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர்.
தமிழில் ஜெயம் ரவி, சதா நடித்து 2003ம் ஆண்டில் வெளிவந்த ‘ஜெயம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன்ராஜா. அதன்பின் “எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், தில்லாலங்கடி, வேலாயுதம், தனி ஒருவன், வேலைக்காரன்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

தமிழில் அறிமுகமாவதற்கு முன்பே 2001ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த ‘ஹனுமான் ஜங்ஷன்’ படம் மூலம் அங்கு முதலில் அறிமுகமானார். முதல் படத்திலேயே அர்ஜுன், ஜெகபதிபாபு, சினேகா, லயா என மல்டிஸ்டார்களை வைத்து படம் இயக்கி, பெரிய வெற்றியையும் பெற்றார். அப்படத்தின் படப்பிடிப்பு 2001ம் ஆண்டு ஜுன் மாதம் 11ம் தேதி ஆரம்பமாகியுள்ளது. அந்த விதத்தில் மோகன்ராஜா திரையுலகத்தில் அடியெடுத்து வைத்து நேற்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க உள்ள புதிய படத்தை இயக்க உள்ளார். இப்படத்தை முடித்த பின் தமிழில் ‘தனி ஒருவன் 2’ படத்தை இயக்குவார் எனத் தெரிகிறது.
திரையுலகில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள மோகன்ராஜாவுக்கு தெலுங்கு, தமிழ் சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.