V4UMEDIA
HomeNewsIndiaஉதவி கேட்டு சோனு சூட்டை சந்திக்க 700 கிலோ மீட்டர் நடந்து வந்த சிறுவன்!

உதவி கேட்டு சோனு சூட்டை சந்திக்க 700 கிலோ மீட்டர் நடந்து வந்த சிறுவன்!

கொரோனா ஊரடங்கு காலத்தில் நிஜத்தில் ஹீரோ ஆகியிருக்கும் சினிமா வில்லன் சோனு சூட். புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பஸ், ரெயில், விமானம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தல், மகள்களை ஏரில் பூட்ட உழுத விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்தல், தற்போது ஆக்சிஜன் சிலிண்டர் உற்பத்தி ஆலை தொடங்கல் என பல பணிகளை செய்து வருகிறார்.

மும்பையில் உள்ள அவரது வீட்டு முன் தினமும் நூற்றுக் கணக்கான மக்கள் உதவி கேட்டு நிற்கிறார்கள். இவற்றை மீடியாக்கள் வெளியிடுவதால் சோனு சூட்டிடம் சென்றால் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக தெலுங்கானாவை சேர்ந்த ஒரு சிறுவன் வெறும் காலுடன் 700 கிலோ மீட்டர் பயணித்து நடந்தே சென்று சோனு சூட்டை சந்தித்துள்ளான்.

தெலுங்கானா மாநிலம் விகராபாத் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்ற அந்த சிறுவனின் தந்தை ஆட்டோ ஓட்டுனராக இருக்கிறார். ஊரடங்கு காரணமாக ஆட்டோ ஓடாததால் கடன் தவணை கட்ட முடியவில்லை. கடன் கொடுத்த வங்கி ஆட்டோவை பறிமுதல் செய்து விட்டது. இதனால் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பத்தை காப்பாற்ற சோனு சூட்டை சந்தித்து உதவி கேட்க கிளம்பி விட்டான் வெங்கடேஷ்.

கடந்த 1ம் தேதி சோனு சூட் படத்தை கழுத்தில் தொங்க விட்டுக் கொண்டு நடக்க தொடங்கியவன் இடையில் கோவில்களில் தங்கி, பிச்சை எடுத்து உணவருந்தி 10 நாட்களுக்கு பிறகு மும்பையை அடைந்துள்ளான். மும்பையில் சோனு சூட்டின் வீட்டை கண்டுபிடித்து சென்றவன் அங்குள்ளவர்களிடம் தான் அவர் ரசிகர் என்றும் அவரை பார்க்க தெலுங்கானாவில் நடந்து வந்திருப்பதாகவும் சொன்னான்.

இந்த தகவல் சோனுசூட்டுக்கு தெரிவிக்கப்பட்டதும். அந்த சிறுவனை சந்தித்து அவனுடன் படம் எடுத்துக் கொண்ட சோனுசூட் அவன் சொந்த ஊருக்கு திரும்பி செல்ல ஏற்பாடு செய்ததுடன் கணிசமான பணத்தையும் கொடுத்து அனுப்பி உள்ளார்.

என்றாலும் “என்னை காண இவ்வளவு தூரம் வந்தது தனக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், இது போன்ற தவறான வழிமுறைகளை நான் ஊக்குவிப்பதில்லை. மற்றவர்களும் செய்யாதிருக்க வேண்டும்” என்று டுவிட்டரில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Most Popular

Recent Comments