கொரோனா இரண்டாவது அலை நாடெங்கிலும் வேகமாக பரவி வருகிறது. பலரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசாங்க வழிகாட்டுதலின்படி தடுப்பூசி மருந்தை, இரண்டு கட்டங்களாக போட்டுக்கொண்டு வருகின்றனர். ஆனாலும் பல இடங்களில் தடுப்பூசி மருந்து பற்றாக்குறை நிலவுகிறது.
இந்த நிலையில் நடிகர் மகேஷ்பாபு, அரசு அதிகாரிகளுடன் பேசி, தனது சொந்த முயற்சியின் பேரில், ஆந்திராவை சேர்ந்த புர்ரிபலேம் மற்றும் சித்தாபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு தடுப்பூசி மருந்து தடையின்றி கிடைப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த இரண்டு கிராமங்களையும் கடந்த 2015ல் தத்து எடுத்திருந்தார் மகேஷ்பாபு. இதில் புர்ரிபலேம் என்பது மகேஷ்பாபுவின் தந்தை நடிகர் கிருஷ்ணாவின் சொந்த ஊர் ஆகும்.
இந்த நிலையில் புர்ரிபலேம் கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் கடந்த வாரம் துவங்கியது. நேற்று ஏழாவது நாளாக தடுப்பூசி போடும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதுகுறித்த தகவலை தடுப்பூசி முகாம் நடைபெற்ற புகைப்படங்களுடன், மகேஷ்பாபுவின் மனைவி நம்ரதா சிரோத்கர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டுளார்.