தனது குடும்பத்தினருடன் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட இயக்குநர் அமீர் தமிழக அரசுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.இயக்குநர் அமீர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பெருந்தொற்று நோயிலிருந்து நம்மை பாதுகாக்க ஒன்றிய மற்றும் மாநில அரசின் அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாடு அரசின் ஏற்பாட்டின் மூலமாக ஓமந்தூரார் சிறப்பு பல்நோக்கு அரசு மருத்துவமனையில் இன்று மருத்துவர் திரு. பக்தவச்சலம் முன்னிலையில் நானும் எனது குடும்பத்தாரும் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டோம். மிகவும் சுகாதாரமாகவும் சிறந்த உபசரிப்புடனும் பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசிப் பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசிற்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களுக்கும் மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் திரு. மா.சுப்ரமணியம் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியையும் பாரட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நம்மிடையே நிலவக்கூடிய தடுப்பூசி குறித்த தவறான தகவல்களை புறந்தள்ளிவிட்டு பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசியை ஏற்றுக்கொண்டு கோவிட்19 நோயிலிருந்து முழுவதுமாக விடுபடுவோம். வளமான ஆரோக்கியமான நோயில்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.