தனுஷ் நடித்துள்ள ஜெகமே தந்திரம் படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி உள்ளார். ஒய் நாட் ஸ்டூடியோ சார்பில் சசிகாந்த் தயாரித்துள்ளார். வருகிற 18ம் தேதி ஓடிடி தளத்தில் படம் வெளிவருகிறது. படத்தின் குழுவினர் நேற்று ரசிகர்களுடன் இணைய தளம் வாயிலாக உரையாடினார்கள். அப்போது தனுஷ் பேசியதாவது:
படம் மக்களை சென்று சேர்வதில் சந்தோஷம்தான். என்றாலும் இன்னும் ஒரு சிறந்த தளத்தில் (தியேட்டர்கள்), சிறந்த நேரத்தில் இது வெளியாகி இருக்கலாம் என்ற சின்ன வருத்தம் இருக்கிறது. என்றாலும் ஊரடங்கு காலத்தில் மன அழுத்தத்தில் இருக்கும் மக்களை இந்த படம் சந்தோஷப்படுத்தப்போகிறது என்பதை நினைக்கும்போது எனக்கு திருப்தியாக இருக்கிறது.
இந்த படத்தில் எனது கேரக்டரான சுருளி எனக்கு மிகவும் பிடித்த கேரக்டர். படப்பிடிப்பு நடக்கும்போதே இதன் தொடர்ச்சியை கொண்டு வாருங்கள் என்ற இயக்குனர் கார்த்திக் சுப்புராஜை கேட்டுக் கொண்டே இருப்பேன். இந்த படம் எனது ரசிகர்களுக்கு மட்டுமல்ல பொதுவான சினிமா ரசிகர்களுக்கும் பிடிக்கும்.
பொதுவாக எனது படங்கள் பற்றி எனக்கு நிறைய நம்பிக்கை இருந்தாலும் அதை மனதுக்குள் வைத்துக் கொள்வேன், வெளியில் சொல்ல மாட்டேன். இந்த படம் பற்றி நான் தைரியமாக வெளியில் சொல்வேன். கார்த்திக் சுப்பராஜின் பெஸ்ட்டாக இந்த படம் இருக்கும். சந்தோஷ் நாராணயன் பாடல்களை விட பின்னணி இசைக்கு கடுமையாக உழைத்திருக்கிறார். அது படம் பார்க்கும்போது தெரியும்.