கொரோனா முழு ஊரடங்கினால் சென்னையில் பல்வேறு இடங்களில் வசிக்கும் நடைபாதை வாசிகளுக்கு பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் மூன்று வேளை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் ராயப்பேட்டை நியூ கல்லூரியும் இணைந்திருக்கிறது.
நியூ கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர், தற்போதைய மாணவர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் இணைந்து தினமும் 600 பேருக்கு மதிய உணவாக தண்ணீர் பாட்டிலுடன் சிக்கன் பிர்யாணி கொடுத்து வருகின்றனர்.கடந்த மே மாதம் 15ம் தேதியில் இருந்து தொடர்ந்து 18 நாட்களாக மதிய உணவு வழங்கி வருகிறார்கள். தினமும் 600 பேருக்கு என்பதிலிருந்து அடுத்து தினமும் ஆயிரம் பேருக்கு பிரியாணி கொடுக்க முடிவெடுத்துள்ளனர்.
ராயப்பேட்டை நியூ கல்லூரி வாசலில் நீண்ட வரிசையில் நின்று காலை 11 மணிக்கு பிரியாணி வாங்கி செல்கின்றனர் மக்கள். ராயப்பேட்டை, சேப்பாக்கம், மெரினா ஆகிய இடங்களில் சாலைகளில் வசிக்கும் வயதானோர், மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தினமும் தண்ணீர் பாட்டிலுடன் பிரியாணி கொடுத்து வருகின்றனர்.
ஊரடங்கு முடியும் வரை இந்த உணவு வழங்கும் சேவை தொடரும் என்று தெரிவித்துள்ளனர். வரும் 7 ம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால், அதன் பின்னர் தினமும் 3 வேளையும் உணவு வழங்கும் சேவை செயல்படுத்தப்படும் என்கின்றனர்.