கடந்த ஆண்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். முன்னணி நடிகராக வலம் வந்த இவரது தற்கொலை பாலிவுட்டையே அதிர்ச்சி அடைய வைத்தது. பாலிவுட்டில் வாரிசுகளின் ஆதிக்கத்தால் இவரது வாய்ப்புகள் பறிக்கப்பட்டது, காதல் தோல்வி, போதை மருந்து பழக்கம் என சுஷாந்த் தற்கொலைக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டது. இது தொடர்பான வழக்கு நடந்து வருகிறது.
இந்த நிலையில் சுஷாந்தின் வாழ்க்கை வரலாறு நய்யே: தி ஜஸ்டிஸ் என்ற பெயரில் திரைப்படமாக தயாராகி உள்ளது. திலீம் குலாட்டி இயக்கி உள்ளார். இதில் சுஷாந்தாக ஜூபர் கானும், அவரது காதலி ரியா சக்ரவர்த்தியாக ஸ்ரேயா சுக்லாவும் நடித்துள்ளனர்.
இவர்கள் தவிர அமன் வர்மா, அஸ்ரானி, சுதா சந்திரன், ஷக்தி கபூர், கிரன் குமார் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். விகாஷ் புரொடக்ஷன் சார்பில் சரோகி, ரகுல் சர்மா ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த படம் வருகிற 11ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கபபட்டுள்ளது.
இந்த நிலையில் சுஷாந்த் சிங் தந்தை கிருஷ்ணா கிஷோர் பட வெளியீட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று டில்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தற்போது சுஷாந்தின் தற்கொலை வழக்கு நடந்து வரும் நிலையில் படம் வெளிவந்தால் வழக்கின் போக்கை இந்த படம் மாற்றும் என்று அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரை படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.