லிங்குசாமி கலா ரசிகர். குறிப்பாக கவிதையின்பால் ஈடுபாடு கொண்டவர். அவரே கவிதைகள் எழுதுவார்.லிங்குசாமி இயக்குனராக 20 வருடங்ளை நிறைவு செய்துள்ளார். 2001 ஆண்டு மே 25-ம் தேதி அவரது முதல் படம் ஆனந்தம் திரைக்கு வந்தது. குடும்ப உறவுகளின் சிக்கல்களையும், மேன்மையையும் சொன்ன திரைப்படம். தமிழகத்து குடும்பங்கள் படத்தை கொண்டாட, படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. லிங்குசாமி தனது குடும்பக் கதையுடன் புனைவு சேர்த்து ஆனந்தத்தை எடுத்திருந்தார்.நமது காலத்தில் உயரத்தையும் அதேயளவு துயரத்தையும் சந்தித்தவர் லிங்குசாமி. இயக்குனராக முதல் படமே வெற்றி. இரண்டாவது ரன்.

முதல் படம் குடும்பப் படம் என்றால் இரண்டாவது ஆக்ஷனும், காதலும் கலந்த அக்மார்க் டீன்ஏஜ் திருவிழா. தல அஜித்தை வைத்து அவர் இயக்கிய படம் ஜி .பிறகு எஸ்.ராமகிருஷ்ணனுடன் சண்டக்கோழியை உருவாக்கினார். குடும்பம், காதல், நட்பு, சண்டை அனைத்தும் கலந்த பெர்பெக்ட் மிக்ஸ் சண்டைக்கோழி. விஷாலுக்கு தெலுங்கில் இப்படமே ஒரு மார்க்கெட்டை உருவாக்கி தந்தது.ஏ.எம்.ரத்தினத்துடன் இணைந்து லிங்குசாமி பீமாவை இயக்கினார். அதன்பிறகு கார்த்தி நடிப்பில் பையா வெளியானது. ஹிட் ஆனது .அடுத்து வந்த வேட்டை சரியாகப் போகவில்லை. அதையடுத்து பெரும் பொருட்செலவில் சூர்யா நடிப்பில் அஞ்சான் எடுத்தார்.

அஞ்சான் படத்தை அவரது திருப்பதி பிரதர்ஸ் தயாரித்திருந்தது. 2007-ல் திருப்பதி பிரதர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தனது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் நிர்வாகத்தில் லிங்குசாமி தொடங்கினார். முதலில் தீபாவளி படத்தை தயாரித்தனர். பையா, வேட்டை, அஞ்சான் படங்களும் அவர்களின் தயாரிப்பே. முக்கியமாக பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வழக்கு எண் 18/9 படத்தை தயாரித்தார். கும்கி, இவன் வேற மாதிரி, கோலிசோடா, மஞ்சப்பை, சதுரங்க வேட்டை என இவர்கள் தயாரித்த, விநியோகித்த படங்கள் வசூல் ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் பாராட்டப்பட்டன.நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு சண்டக்கோழி 2 படத்தை இயக்கினார். தற்போது தமிழ், தெலுங்கில் தெலுங்கு நடிகர் ராமை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்