தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. நாட்டிலேயே தினசரி கொரோனா பாதிப்பு அதிகம் பதிவாகும் மாநிலமாக தமிழகம் தற்போது உள்ளது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அமல்படுத்தியுள்ள ஊரடங்கு வரும் 24-ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது.
இதனால், மருத்துவ நிபுணர்களுடன் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது தமிழகத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைத்தது. இந்த ஆலோசனைக்குப் பிறகு அனைத்துக் கட்சிகள் அடங்கிய சட்டமன்ற கட்சி குழுவுடன் முதல் அமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் போது, ஊரடங்கை நீட்டிக்க அனைத்து கட்சி எம்.எல்.ஏக்களும் ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து, தமிழகத்தில் 24 ஆம் தேதி முதல் ஒருவாரம் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். கட்டுப்பாடுகள் குறித்த விவரங்களை காணலாம்.
மருந்தகம், நாட்டு மருந்து கடைகள், பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் இயங்கும் என கூறப்பட்டுள்ளது. உணவகங்களில் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை, மதியம் 12 மணி முதல் 3 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 9 வரை பார்சல் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள், விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. Swiggy, Zomato போன்ற நிறுவனங்கள் பார்சல் சேவையில் ஈடபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள், ஐ.டி. நிறுவனங்கள் வீட்டிலேயே பணிபுரிய வேண்டுக்கோள் விடுக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் பங்குகள், ஏ.டி.எம். மையங்கள் வழக்கம் போல் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உரிய மருத்துவ காரணங்கள், இறப்புகளுக்கு மட்டும் மாவட்ட விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவுடன் அனுமதி வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மருத்துவ காரணங்களுக்காக மாவட்டங்களுக்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்திலும் மாவட்டங்களிலும் அத்தியாவசிய துறைகள் மட்டும் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மின்னணு சேவை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம்.