இந்தியாவில் கொரோனா 2வது அலையில் சிக்கி, இதுவரை 270 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்’ என, இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐ.எம்.ஏ.,) தெரிவித்துள்ளது.இந்திய மருத்துவ கூட்டமைப்பு தலைவர் மருத்துவர் ஜெயலால் தெரிவித்துள்ளதாவது:
கொரோனா வைரஸ் 2வது அலையில் சிக்கி இதுவரை நாடுமுழுவதும் 270 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் ஐ.எம்.ஏ., முன்னாள் தலைவரும் பிரபல மருத்துவரான கே.கே.அகர்வால் உயிரிழந்துள்ளார். மிக இளவயதில் புதுடில்லி ஜி.டி.பி., மருத்துவமனையில் பணியாற்றிய 25 வயது அனாஸ் முஜாகித் கடந்த 9ம் தேதி கொரோனா தொற்றால் உயிரிழந்தார். மருத்துவர்களில் உயிரிழந்தவர்களில் வயதானவர்களில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காது, மூக்கு, தொண்டை சிறப்பு நிபுணர் மருத்துவர் சத்தியமூர்த்தி தனது 90 வயதில் உயிரிழந்தார்.அதிகபட்சமாக பிஹார் மாநிலத்தில் 69 மருத்துவர்கள் இதுவரை கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். அதைத் தொடர்ந்து உத்தர பிரதேசத்தில் 37 மருத்துவர்கள், புதுடில்லியில் 29 பேர், ஆந்திராவில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா முதல் அலையில் 748 மருத்துவர்கள் உயிரிழந்த நிலையில் 2வது அலை முடிவதற்குள் 270 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் 2வது அலையில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலான மருத்துவர்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். முதல் அலையைவிட, 2வது அலை மிகவும் மோசாக இருந்து வருகிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.