கொரோனா இரண்டாம் பரவலின் தீவிரத்தை அறியாத மக்கள், கூட்டமாக பொது இடங்களில் கூடுகின்றனர். குறிப்பாக காய்கறி மார்க்கெட்டுகள் ஹாட்ஸ்பாட்டுகளாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சேலம் : கொரோனா பரவல் காரணமாக சேலம் சின்ன கடை வீதி பகுதியில் இயங்கி வந்த காய்கறி மார்க்கெட் பழைய பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இதேபோல் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் இயங்கி வந்த காய்கறி மார்க்கெட் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் காலை முதலே குவிந்த மக்கள், தனிமனித இடைவெளியை காற்றில் பறக்கவிட்டபடி, காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். அவர்களில் பலரும் முகக்கவசம் அணியாததால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் : திருவள்ளூரின் முக்கிய சாலைகளில் அனைத்து வாகனங்களும் சகஜமாக செல்வதால், ஊரடங்கு என்ற நிலை மறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியதுபோல் காட்சி அளிக்கிறது.
மார்க்கெட்டுகளில் திரண்ட மக்கள், காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வாங்க அலைமோதினர். கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக 3 கடைகளுக்கு நகராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர்.
அதேநேரம் சில இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டுவரும் போலீசார், தேவையின்றி சாலைகளில் சுற்றித்திரிவோருக்கு அபராதம் விதித்துவருகின்றனர்.
திருவண்ணாமலை : தமிழக அரசின் உத்தரவை மீறி திருவண்ணாமலையில் 10 மணிக்கு மேல் மளிகைக்கடைகள் இயங்கின.
தேரடி வீதி, மண்டித் தெரு, வேட்டவலம் சாலை, திருக்கோவிலூர் சாலை, கடம்பராயன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாலையோர நடைபாதைகளில் உள்ள காய்கறி மற்றும் பழக்கடைகளும் வழக்கம்போல் இயங்கின.
கடலூர் : கடலூர்மஞ்சக்குப்பம் மார்க்கெட் பகுதி மற்றும் திருப்பாதிரிபுலியூர் வண்டிப்பாளையம் சாலையில் ஏராளமான மக்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் உலாவருகின்றனர்.
கொரோனா அச்சமின்றி, காய்கறி மற்றும் மளிகை கடைகளில் குவிந்த மக்கள் பொருட்கள் வாங்குவதிலேயே ஆர்வம் காட்டினர்.
கரூர் : கரூரில் காமராஜ் மார்கெட், உழவர் சந்தை, உழவர் சந்தையின் முன்பகுதி, பேருந்து நிலையத்தில் பின்பகுதியில் குவிந்த திரளானோர், காய்கறிகளை வாங்கி சென்றனர்.
தற்காலிகமாக அமைக்கப்பட்ட பேருந்து நிலைய சந்தையில் பொதுமக்களின் எண்ணிக்கை சற்றுக் குறைவாகவே காணப்பட்டது.
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ராஜாஜி சந்தையில் ஒரே நேரத்தில் ஏராளமான பொதுமக்கள் காய்கறி வாங்க குவிந்ததால் தனிமனித இடைவெளி கேள்விக்குறியானது.
கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டு ராஜாஜி சந்தையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
திருப்பூர் : கொரோனா பரவலால் 10 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் திருப்பூர் அம்மாபாளையம் பகுதியில் உள்ள காய்கறி கடைகளில் திரண்ட மக்கள், முண்டியடித்துக்கொண்டு காய்கறிகளை வாங்கி சென்றனர்.
அதேபோல் பல்லடம் சாலையிலுள்ள பலசரக்கு கடைகளில் வியாபாரிகளும் திரண்டதால் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.