நடிகர் தனுஷ் நடிக்கும் ஜகமே தந்திரம் டீசர் வெளியாகியுள்ள நிலையில் படம் ஓடிடி தளத்தில்தான் ரிலீஸ் ஆகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’.இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க, ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. லாக்டவுனுக்கு முன்பே இப்படம் ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. இதனால் லாக்டவுன் நேரத்தில் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்படும் என்று தகவல் வெளியானது.ஆனால் தனுஷ் ரசிகர்கள் படத்தை தியேட்டரில்தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் ஜகமே தந்திரம் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பான அறிவிப்பை நெட்பிளிக்ஸ் தளம் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. அதில் போடு தகிட தகிட.. ரகிட ரகிட.. விரைவில் நெட்பிளிக்ஸுக்கு வருகிறார் சுருளி என பதிவிட்டுள்ளது. இதன் மூலம் ஜகமே தந்திரம் வெளியீட்டு உரிமையை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் கைப்பற்றியிருப்பது உறுதியாகியுள்ளது.
இதனிடையே ஜகமே தந்திரம் படத்தின் டீசரை படத்தின் இயக்குநரான கார்த்திக் சுப்புராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். யார் அந்த சுருளி என்ற வசனத்துடன் தொடங்குகிறது டீசர்.அதற்கு சுருளி ஒரு ஆபத்தான நொட்டேரியஸ் மற்றும் கேங்ஸ்டர் என்று பதில் குரலும் ஒலிக்கிறது. ஆக்ஷன் காட்சிகள் நிறைந்துள்ள இப்படத்தில் மிரட்டலாக வருகிறார் தனுஷ். இறுதியாக சரிடா.. பொத்திட்டு போடா என்று கூறுகிறார் தனுஷ்.
