காங்கிரஸ் எம்எல்ஏ குல்தீப் பிஷ்னோய் மகனுடன் நடிகை மெஹ்ரீனுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்தவர் மெஹ்ரீன். தமிழில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். பின்பு விஜய் தேவரகொண்டா நடித்த ‘நோட்டா’, தனுஷ் நடித்த ‘பட்டாஸ்’ ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருந்தார்.குறிப்பாக தெலுங்கில் பல்வேறு முன்னணி நாயகர்களுடன் நடித்திருந்தார். அனில் ரவிப்புடி இயக்கத்தில் வெங்கடேஷ், வருண் தேஜ், தமன்னா ஆகியோருடன் ‘எஃப் 3’ என்னும் தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார் மெஹ்ரீன். முன்னதாகவே இதே கூட்டணியுடன் நடித்த ‘எஃப் 2’ மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது மெஹ்ரீனுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஹரியாணா மாநிலத்துக்கு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மூன்று முறை முதல்வராக இருந்த பஜன் லாலின் பேரன் பாவ்யா பிஷ்னோய் உடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவரது தந்தை குல்தீப் பிஷ்னோய் ஹரியாணா மாநிலத்தின் அதம்பூர் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ ஆக இருக்கிறார். பாவ்யா பிஷ்னோய்யும் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
மெஹ்ரீன் – பாவ்யா பிஷ்னோய் தம்பதியினரின் திருமண நிச்சயதார்த்தம் மார்ச் 12-ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது. தற்போது மெஹ்ரீன் நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன், திருமணத் தேதியை இரு வீட்டாரும் முடிவு செய்யவுள்ளனர்.
மெஹ்ரீனுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அவருடைய திரையுலக நண்பர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.