இயக்குனர் பாரதிராஜா தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
அன்புடையீர், வணக்கம்.
கொரோனா கால சிரமங்களைக் கடப்பதற்கு முன்னரே திரையரங்குகள் பலவிதமான இன்னல்களை தயாரிப்பாளர்கள் மீது தொடர்ந்து அடுக்கி வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக VPF, Transparency, TMC, Convenience fee என பல்வேறு காரணங்களுக்காக கடுமையாக போராடி வருகிறோம். ஒன்றிலும் தீர்வு கண்டபாடில்லை. திரைப்படங்கள் தயாரிக்கப்படுவது மக்களை மகிழ்விக்கவேயன்றி திரையரங்குகளுக்கு இரையாகுவதற்கு அல்ல.
இந்த இன்னல்களுக்கு நடுவே OTT மூலம் மக்களை நேரிடையாக சென்றடைய முடியும் என்ற நிலை கிடைக்கப்பெற்ற பொழுது உண்மையில் தயாரிப்பாளர்கள் நிம்மதிப் பெருமூச்சடைந்தனர். கடன்சுமை தவிர்க்க சில படங்கள் வெளியிட்ட பொழுது தயாரிப்பாளர்களுக்கு அவ்வளவு நிம்மதி. இதற்கு திரையரங்குகள் அபயக் கூக்குரல் எழுப்பினர். அதேசமயம் சில தயாரிப்பாளர்கள் நல்ல விலை கிட்டியபொழுதும், திரையரங்கங்களை தேர்ந்தெடுத்து வெளியிட்டனர். உடனே அவர்களை தெய்வம் என்றார்கள், விளக்கேற்றியெல்லாம் நன்றி தெரிவித்தனர். எல்லோருக்கும் லாபம் என்றவுடன் மகிழ்ந்த தயாரிப்பாளர் தனது நஷ்டத்தைப் போக்க, 14 -வது நாள் OTT-ல் படத்தை வெளியிட முடிவு செய்த மறுநிமிடம், அவரை வாய்க்கு வந்தபடி திட்டினார்கள், தண்டம் வைத்தார்கள். ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து மனிதனைக்கடித்த கதையை நேரில் கண்டோம்.
இந்நிலையில் வரும் 12 – ஆம் தேதி “ஏலே” திரைப்படத் தயாரிப்பாளர் தன்னைமட்டும் காக்க நினைக்காமல், திரையரங்குகளும் வாழ வேண்டும் என்று, கோடி ரூபாய் வரை செலவு செய்து படத்தை வெளியிட முற்படுகிறார். ஆனால் இன்று திரையரங்குகளோ, நாங்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தும், அதை தவிர்த்துவிட்டு தயாரிப்பாளர்கள் 30 நாட்கள் வரை OTT -ல் வெளியிடமாட்டேன் என கடிதம் கொடுத்தால் மட்டும் தான் படங்களை வெளியிடுவோம் என அனைவருக்கும் தன்னிச்சையாக முடிவெடுத்து நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்றுவிடும் என நினைக்க வேண்டாம்.
தயாரிப்பாளர்கள் இல்லாமல் திரைப்படங்கள் இல்லை என்பதை உங்களுக்கு நியாபகப்படுத்த விரும்புகிறோம். “ஏலே” திரைப்படம் யார் தடுத்தாலும் மக்களை சென்றடையும். வெற்றியும் பெறும்திரையரங்குகளின் எதேச்சதிகாரத்தை முற்றிலும் தவிர்த்தால்தான் கலைத்துறை மீளும் என்றால் அதற்கான நாள் வெகு தொலைவில் இல்லை. இனி அதை துரிதப்படுத்த தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் (TFAPA) செயல்படும் என்பதை திரையரங்குகளுக்கும் அதை ஆட்டுவிக்கும் ஆளுமைகளுக்கும் தெரிவித்துக்கொள்கிறோம்.பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண்பதே சினிமாவை வாழ வைக்கும்.
என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்
நன்றியுடன்
பாரதிராஜா
தலைவர் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்