பிரபல நடிகை கயல் ஆனந்தி, இணை இயக்குநர் சாக்ரடீஸைத் திருமணம் செய்துள்ளார்.
2014-ல் பொறியாளன் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் ஆனந்த். அடுத்து அவர் நடித்த கயல் படத்தினால் கயல் ஆனந்தி என்கிற பெயரைப் பெற்றார். ஆரம்பத்தில் தெலுங்குப் படங்களில் மட்டும் நடித்து வந்த ஆனந்தி, 2014-க்குப் பிறகு தமிழ்ப் படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
இந்நிலையில் இயக்குநர் நவீனின் உறவினரும் இணை இயக்குநருமான சாக்ரடீஸைத் திடீர் திருமணம் செய்துள்ளார் 27 வயது ஆனந்தி. தெலங்கானா மாநிலம் வாராங்கலில் ஆனந்தி – சாக்ரடீஸ் திருமணம் நடைபெற்றுள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இத்திருமணத்தில் கலந்துகொண்டார்கள். அலாவுதீனின் அற்புத கேமரா, அக்னி சிறகுகள் ஆகிய படங்களில் இணை இயக்குநராக சாக்ரடீஸ் பணியாற்றியுள்ளார். திருமணப் புகைப்படங்களைத் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ் குமார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.