சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் தளபதி விஜய் ஆகிய இருவரின் படங்களையும் ஒரே நேரத்தில் தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் நாளை முக்கிய அப்டேட்டை வெளியிடுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. நடிகர் ரஜினி சட்டமன்ற தேர்தலில் கட்சி தொடங்கி போட்டியிட இருப்பதால் அண்ணாத்த பட பணிகளை ஜனவரி மாதத்துக்குள் விரைவாக முடிக்க முயற்சி செய்து வருகிறார்.நடிகர் விஜய்யின் தலைப்பு அறிவிக்கப்படாத 65வது படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக முன்னதாகவே செய்திகள் வெளியானது.இந்நிலையில் தற்போது டிவிட்டரில் பதிவிட்டுள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளது, அதில் மெகா அறிவிப்பு என்று தலைப்பிட்டு கீழே நாட்கள் மற்றும் மணி நேரங்கள் ஓடுகிறது.
அந்த வீடியோவில் இன்று, நாளை, ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 31 ஆகிய நாட்கள் காட்டப்படுகின்றன. இதனால் இந்த அறிவிப்பு ரஜினி நடிக்கும் அண்ணாத்த படம் குறித்ததா? அல்லது விஜய்யின் 65வது படம் குறித்ததா? இல்லை நடிகர் தனுஷ் படம் குறித்தா ? இல்லை சூர்யா படம் குறித்தா ? என ரசிகர்கள் தங்களுக்குள் போட்டி போட்டு விவாதித்து வந்த நிலையில் இதற்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் சன் பிக்சர்ஸ்.
தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் இயக்க உள்ளார். மேலும் கத்தி, மாஸ்டர் படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக தளபதி விஜய்யுடன் கை கோர்த்துள்ளார் அனிருத்.
இதுவரை இல்லாத அளவுக்கு விஜய்யின் தளபதி 65 பட அறிவிப்பு வித்தியாசமாக உள்ளது. படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மற்றும் தளபதி விஜய் ஆகிய இருவரும் பேசிக் கொண்டே சிறிது தூரம் நடந்து வந்து படத்தின் இயக்குனரான நெல்சனை அறிமுகப்படுத்தி வைக்கின்றனர். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் தளபதி 65 படத்தின் போஸ்டர் வீடியோ துப்பாக்கிகள் குண்டுகள் தெறிக்க வித்தியாசமாக வெளியானது. இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வைரலாகிறது.