நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சூரரை போற்று’. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் அமேசான் பிரைமில் நேரடியாக கடந்த மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. நேற்று இப்படம் வெற்றிகரமான 25வது நாளை சிறப்பாக கொண்டாடியது நாம் அனைவரும் அறிந்ததே.
இந்த திரைப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறான சிம்ப்ளி ப்ளை (தமிழில் வானமே எல்லை) என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
சூர்யாவின் 2டி நிறுவனமும், குனீத் மோங்காவின் சிக்யா நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தை தயாரித்திருந்தது.
தற்போது சூரரைப் போற்று திரைப்படம் புதிய சாதனையையும் படைத்துள்ளது. அதாவது டிவிட்டரில் அதிகம் டிவீட் செய்யப்பட்ட படங்களில் மறைந்த பிரபல நடிகர் சுஷாந்த் சிங்கின் “தில் பெச்சாரா” திரைப்படம் முதல் இடத்தையும், நடிகர் சூர்யாவின் “சூரரைப் போற்று” இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. இதற்கு அடுத்ததாக மகேஷ் பாபுவின் “சரிலேறு நீக்கவெறு” படம் இடம் பிடித்துள்ளது.
இந்த செய்தியை சூர்யா ரசிகர்கள் மிக சந்தோஷமான நிலையில் கொண்டாடி வருகின்றனர்.