யார் வெளியேற்றப்பட போகிறார் என்ற எதிர்பார்ப்பு மிகுந்த நாள் எபிசோட் நேற்றையது. ஆரி, ரம்யா, நிஷா, ஆஜித் உள்ளிட்டோர் காப்பாற்றப்பட்டதை முன்கூட்டியே நம்மால் தெரிந்துகொள்ள முடிந்தது. அனிதா, ஷனம், ஷிவானி மூவரில் யார் என அறிந்துகொள்ளும் ஆர்வம் பலருக்கும். அதற்கான விடை கிடைத்தபோது எல்லாருக்குமே அதிர்ச்சி. ஏன்… எதற்காக? பின்வரும் தகவலில் பார்ப்போம்.
.
கோட் சூட்டோடு எளிமையாக வந்தார் கமல். ஆம். பிக்பாஸ் கமல் உடுத்தும் உடைகள் விதவிதமானவை. அவற்றோடு ஒப்பிடுகையில் கோட் சூட் எளிமையே. அம்பேத்கர், நெல் ஜெயராமன் நினைவு தினம் பற்றி பேச சில நிமிடங்கள் ஒதுக்கியமை சிறப்பு.
முந்தைய நாளில் தனக்கு ஆதராக கமல் பேசியதற்கு நன்றி தெரிவித்தார். ஓகே.. இப்போது 1-13 வரிசைப்படுத்தலாமா… என்று கேட்டதும் ஜெர்க் ஆனார்கள். ஆரிக்கு முதல் இடம் என்றால் இரண்டாம் இடம் ஷனம்க்கு ஓகேவா என்றதும், நான்கைந்து பேர் கைத்தூக்கினர்.
அர்ச்சனா, சோம் ஆகியோர் ரியோவுக்கு முதல் இடம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தினார்கள்.
’உட்கார்ந்த இடத்திலேயே வேர்கடலை சாப்பிட்டுக்கொண்டே ஜெயிக்க ஆசைப்படுறார்’னு சொன்னீங்களே அது யாரை என்று பாலாவிடம் கேட்டார் கமல். அது எப்போது சொன்னோம் என்றே மறந்திருந்தார் பாலா. அங்கிருந்த அனிதா ‘தான் சொல்வதாக’ குறுக்க புகுந்தார். அவர் பட்டியலிட்டது, நிஷா, சோம், ரமேஷ், கேபி. உடனே சூடாக நிஷா திருப்பிக்கொடுத்தார். ரமேஷ் பதிலுக்கு அனிதாவை வார, ஹெட்மாஸ்டர் சார் இருக்கும்போது எனக்கென்ன கவலை என்பதுபோல கமலையே பார்த்துக்கொண்டிருந்தார் அனிதா. நீங்க இப்போ என்னை திட்டினாலும் எனக்குத்தான் மைலேஜ் என்பதாக இருந்தது அவரின் திட்டம்.
ரியோவை அனிதா தனிப்பட்ட முறையில் பேசியது எல்லாம் பஞ்சாயத்தில் கடைசி வரை வர வில்லை. சின்ன வார்த்தை ரியோ சொன்னதை அழகாகக் கோர்த்துவிட்டிருந்தார் அனிதா. ஆனால், ஹீரோ மிதப்பில் இருக்கீங்களா… உள்பட பல விஷயங்களைக் கேட்டதை பஞ்சாயத்தாக மாற்றாமல் தவிர்த்தார். ஆனால், உள்நோக்கம் இல்லாது பேசியதற்காக ரியோ பக்கம் நின்றார் கமல்ஹாசன் .
’ரம்யா பேசவே மாட்டேங்குறாங்க… பாலாவுக்கு மட்டும் ஷிவானி பேசறாங்க’ என ஒரு பன்ச் வைத்தார் கமல். செம ஜெர்க்கானது ஷிவானி. ஓ! அதையே இப்பதான் கண்டுபிடிக்கிறீங்களா என்ற ஜெர்க் அது.
ஆக்டிவிட் ஏரியாவில் செக்கப் போனீங்களே என விசாரித்தபடியே நிஷா எவிக்ஷனிலிருந்து காப்பாற்றப்பட்டதைச் சொன்னது வழக்கம்போல அர்ச்சனா அழுது தீர்த்தார். ‘நிஷாவை மிஸ் பண்ணிட்டோமோன்னு பயந்துட்டோம்’னு அர்ச்சனா சொல்ல, ‘ஓ! நீங்களும் மிஸ் பண்ணிட்டீங்களா… ஆடியன்ஸ்ம் மிஸ் பண்ணிட்டாங்க’ என டைமிங்கில் சொன்னார் கமல்ஹாசன் .
இந்த சீசனில் முதல்முறையாக ஆடியன்ஸ் ஒருவரைப் பேச வைத்தார்கள். அவர் பேசியது ஷிவானியிடம் ‘ஓவர் கான்பிடண்டடில்தான் கால்செண்டர் டாஸ்க்கில் போனை வைக்கச் சொன்னீங்களா?’என சரியாகக் கேட்டார். கொஞ்சம் திகைத்து, “இல்ல.. அது ஆடியன்ஸோடு ரியாக்ஷனைத் தெரிதுகொள்ளவே’ என்று பதில் சொன்னார்.
ஆடியன்ஸ் பேசியதற்கு பிறகு காப்பாற்றப்பட்டவர் ஆஜித். ஊரே கொண்டாடியது. ஆஜித்தை தோளில் தூக்கி வைத்து ஊர்வலம் போனார்கள். ஆக, அனிதா, ஷனம், ஷிவானி என மூவராக எவிக்ஷன் பட்டியல் சுருங்கியது. அனிதா ஓவர் ரியாக்ட் செய்து, ‘நான் தான் வெளியே போக போறேன்’ என சீன் கிரேயேட் பண்ணிட்டு இருந்தார். ஷனம்க்கு உள்ளே உதறினாலும், வெளியே கெத்தாக அலைந்துகொண்டிருந்தார். எங்கே ஷிவானி வெளியே போய்விடுவாரோ… நமக்கு அப்பறம் யார் ஊட்டி விடுவார்கள் என்ற கவலையோடு பாலா முணகிக்கொண்டிருந்தார்.
அப்பவே ஷனம் ஆரம்பித்திவிட்டார். பாலாவிடம், ‘நான் போனா நீதான் காரணம்’ என பாலாவைச் சாடினார்.
இடைவெளிக்குப் பிறகு, யார் வெளியேற்றம் என்ற கேள்வியோடு உள்ளே நுழைந்தார் கமல். அனிதா, ஷிவானி, ஷனம் மூவரில் யார் இருக்க வேண்டும் எனக் கேட்டபோது, பல ஓட்டுகள் ஷனம்க்கு விழுந்தன. இப்படித்தான் சம்யுக்தாவுக்கு ஒருமுறை விழுந்தன. ஆரி மட்டும், ‘அனிதா வெளியே போவாங்க’னு சொல்லி அனிதாவின் வயிற்றெரிச்சலை வாங்கிக்கொண்டார். இது இன்று வெடிக்கும்.
மூவரும் ஒருமித்த குரலில் மக்களின் தீர்ப்பை ஏற்பதாகத் தெரிவித்ததும், ‘ஷனம்’ என எழுதப்பட்ட கார்ட்டைக் காட்டினார் கமல். சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் ஷனம்க்கு ஆதரவாக எப்பிசோட்கள் சென்றதால் ஷனமே வெளியேற்றப்படுவார் என்று பலராலும் யூகிக்க முடிந்த ஒன்றுதான். ஆனால், ‘நீங்க தனியா கேம் ஆடுங்க… எந்த பிரச்னை என்றாலும் துணிச்சலோடு கேளுங்க… குருப்பில் சேராதீங்க… கோபப்பட்டு வார்த்தையை விடாதீங்க… தனித்துவத்தைக் காட்டுங்க… உங்கள் திறமையால் மக்களை மகிழ்ச்சிப் படுத்துங்க… என கமல் ஹாசன் சொன்ன அனைத்தையும் சரியாகச் செய்தவர் ஷனம் மட்டுமே. அப்படி கமல் வழிகாட்டல் படி விளையாண்ட ஷனம் வெளியேற்றப்பட்டிருக்கிறார். அப்படியெனில், பிக்பாஸ் கேமை ஒழுங்காக ஆடினால் அவர் வெளியேற்றப்படுவார் என்று அர்த்தம் கொள்ளத்தான் வேண்டும்.
60 நாட்களாக ஷிவானியின் பங்களிப்பு வீட்டில் எதுவுமே இல்லை. பாலாவுடன் ’அன்பான நட்பு’ உறவை வளர்ப்பதைத் தவிர. ஓட்டெடுப்பில்கூட பாலா தோற்றுவிடக்கூடாது என ஓட்டுப்போட்டவர். பாலாவின் வன்முறை பேச்சால் பாதிக்கப்பட்ட ஷனம்க்கு ஒரு வார்த்தைகூட ஆதரவாகப் பேசாதவர் ஷிவானி. அவர் காப்பாற்றப்பட்டிருக்கிறார். வழக்கம்போல , மக்கள் ஓட்டு மட்டுமே என்று நம்புவது சிரமமாகவே இருக்கிறது. பிக்பாஸ் வீட்டிலும் ஒரு ஈவிஎம் மிஷின் இருக்குமோ என்ற சந்தேகம் வரத்தான் செய்கிறது.
வெளியே வந்த ஷனம் அதை வேறு மாதிரி வெளிப்படுத்தினார். ரியோவுக்கு அட்வைஸ் பண்ணும்போது ‘கோபத்தை குறைச்சிகிட்டு’ என்று ஆரம்பித்தவர். ‘இல்ல… இல்ல… நீங்க இப்ப ஆடற மாதிரியே ஆடுங்க… என்ன மாதிரி ஆடினா வெளியே வந்துடுவீங்க’ என அவரின் வெளியேற்றம் பற்றி துல்லியமான விமர்சனத்தை கமல்ஹாசன் முன்னாடியே முன்வைத்தார்.
அனிதாவிடம் பேசும்போது, ‘நல்லா என்ஜாய் பண்ணு… அப்பதான் வீடியோவில் நல்லா வரும்’ என டிப் கொடுத்தார். அனிதாதான் ஷனம் வெளியேறியதற்கு அதிகம் அழுதது. அது ஓவர் ஆக்ட்டிங்காக இருந்தாலும், அப்படி அழுவதுபோல ஒருவரை சம்பாதிப்பது பெரிய விஷயம்தான்.
’தான் வெளியேறியதற்கு பாலாதான் காரணம்’ என ஷனம் சொன்னது மிகப் பெரிய உண்மை இருக்கிறது. பாலாவின் ரசிகர்களே ஷனம்க்கு எதிராக ஓட்டுகள் போட்டிருக்கக்கூடும் என்பதே யதார்த்தம். பாலா ஹீரோவாக ஷனமை வில்லியாக்கி விட்டார். இனி அடுத்த வில்லியை வில்லனைத் தேடுவார் பாலா