V4UMEDIA
HomeNewsKollywoodடிஎஸ்கே காமெடி நடிகரே இல்லை ; விஜய் டிவி ஆதவன் பரபரப்பு பேச்சு

டிஎஸ்கே காமெடி நடிகரே இல்லை ; விஜய் டிவி ஆதவன் பரபரப்பு பேச்சு

தமிழ் திரையுலகில் நம்பிக்கை தரும் நகைச்சுவை நடிகராக முன்னேறி வருபவர் திருச்சி சரவணக்குமார் என்கிற டிஎஸ்கே.. சின்னத்திரையில் வளர்ந்து வந்த நேரத்தில், தமன்னா நடித்த காமெடி ஹாரர் படமான பெட்ரோமாக்ஸ் படம் மூலம் லைம்லைட்டுக்குள் வந்த இவர், தற்போது பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் சற்றே வித்தியாசமான முயற்சியாக ‘புனிதன்’ என்கிற பைலட் படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார் டிஎஸ்கே.

டாப் வியூ என்டர்டெய்ன்மென் சார்பில், வினோத் தயாரிப்பில், உருவாகியுள்ள இந்தப்படத்தை, இயக்குநர் பாபி ஜார்ஜ் இயக்கியுள்ளார். இவர் பிரம்மா உள்ளிட்ட படங்களில், உதவி இயக்குனராக பணியாற்றியவர். 28 நிமிடம் ஓடும் பைலட் பிலிமாக உருவாகியுள்ள, இந்த புனிதன் படத்தின் திரையிடல் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

Image

இந்த நிகழ்வில், படக்குழுவினருடன் நடிகர்கள் காளி வெங்கட், முனீஸ்காந்த், ஜெய்வந்த், ஆதவன், ஜார்ஜ், இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் இசையமைப்பாளர் ரமேஷ், தயாரிப்பாளர் சங்கத்தின் (கில்ட்) கௌரவ செயலாளர் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

இயக்குனர் பாபி ஜார்ஜ் பேசும்போது, “இது ஒரு முழுநீள திரைப்படமாக எடுக்கப்போகும் கதை.. தயாரிப்பாளருக்காக, தற்போது இதை பைலட் பிலிமாக எடுத்துள்ளோம். கதை வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக, நிறைய விஷயங்களை மறைத்து தான், படமாக்கியுள்ளோம். இதன்மூலம் நாயகன் டிஎஸ்கே மற்றும் படத்தில் நடித்த பலருக்கும் பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் என நம்புகிறேன்” என்று கூறினார்.

நாயகன் டிஎஸ்கே பேசும்போது, “இந்தக் படத்தின் இயக்குநர் பாபி ஜார்ஜ் என்னை போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க சொன்னபோது, எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தது.. காமெடியாக நடித்துவரும் நான், போலீஸ் கேரக்டரில் நடித்தால், அது காமெடியாக போய்விடக்கூடாது என்கிற பயம் இருந்தது. ஆனால், “இது ஹீரோ கதாபாத்திரம் அல்ல படத்திலுள்ள மற்ற கதாபாத்திரங்கள் போல, இதுவும் ஒன்று என, நினைத்துக்கொண்டு நடியுங்கள், அதுமட்டுமல்ல, ஏற்கனவே காமெடியாக நடித்துள்ளீர்கள் சீரியஸ் கதாபாத்திரங்களையும் முயற்சித்துப் பார்க்கலாமே என்று இயக்குநர் பாபி ஜார்ஜ் என்னை ஊக்கப்படுத்தினார்” என்றார் டிஎஸ்கே.

நடிகர் காளி வெங்கட் பேசும்போது, “நீண்ட நாட்களாகவே, இதை முழு நீள திரைப்படம் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன்.. இங்கே வந்தபோது தான், இது பைலட் படம் என்பது தெரியவந்தது.. நான், நிறைய குறும்படங்களில், நடித்திருக்கிறேன். ஆனால், அது முழுநீள திரைப்படமாக மாறியபோது, அதில் நடிக்க, எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.. இந்த படத்தின் இயக்குநர், கண்டிப்பாக டிஎஸ்கேவை வைத்து, இதை முழுநீள திரைப்படமாக எடுக்க வேண்டும்” என்று வேண்டுகோள் ஒன்றை வைத்தார்..

நடிகர் முனீஸ்காந்த் பேசும்போது, “பெட்ரோமாக்ஸ் படத்தில் நடிக்கும்போது தான், டிஎஸ்கே அறிமுகமானார்.. என்றாலும், சமீபத்தில் விஜய் டிவியில் நடைபெற்ற ஒரு தெருக்கூத்து நிகழ்ச்சியில், அவரது நடிப்பை பார்த்து மிரண்டு போனேன்.. அவருக்குள் உணர்ச்சிகரமான நடிப்பு இருப்பது, அப்போதுதான் தெரிந்தது. இந்த புனிதன் படத்திலும் அதே உணர்வைத்தான் வெளிப்படுத்தியுள்ளார்” என்று பாராட்டினார்

நடிகர் ஆதவன் பேசும்போது, “நான் ஒரு காமெடி நடிகர், என்னை சீரியஸான கதாபாத்திரத்தில், மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என, நண்பன் டிஎஸ்கே சந்தேகமாக, ஒரு கேள்வி கேட்டார். ஆரம்பத்திலேயே, அவரிடம் நான் சொல்லவேண்டும் என நினைத்தேன், அவர் ஒரு காமெடி நடிகரே கிடையாது.. ரொம்ப சீரியஸான ஒரு நடிகர் என்று.., சமீபத்தில் நடைபெற்ற, தெருக்கூத்து கலை நிகழ்ச்சியில் டிஎஸ்கேவின் நடிப்பை பார்த்தபோது அதை முழுதாக உணர்ந்தேன்.. ஒரு நகைச்சுவை கலைஞரால் அவ்வளவு சீரியஸாக மாற முடியாது.. டிஎஸ்கே, ஒரு உணர்வுப்பூர்வமான நடிகர்.. அவருக்கு ஒரு மிகப்பெரிய, நல்ல இடம் கிடைக்க வேண்டும் என்பது, என்னுடைய ஆசை.. எங்களை மாதிரி டிவி நடிகர்களை வைத்து, பைலட் பிலிம் மட்டும்தான் எடுப்பார்கள்.. ஆனால், அது பெரிய படமாக மாறும்போது, வேறு யாருக்கோ, அந்த வாய்ப்புகள் போய்விடும், இந்த படத்தின் இயக்குநர் பாபி ஜார்ஜ், டிஎஸ்கேவை கதாநாயகனாக வைத்தே, இதை முழு நீள திரைப்படமாக இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

Most Popular

Recent Comments