அறிமுக இயக்குனர் வி விக்னராஜன் இயக்கத்தில் கைதி புகழ் அர்ஜுன் தாஸ், வினோத் கிஷான் நடிப்பில் உருவாகியுள்ள ‘அந்தகாரம்’ திரைப்படம் நவம்பர் 24-ம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியானது.
இயக்குனர் அட்லீ இந்தப் படத்தை வெளியிட்டுள்ளார். ஜெயராம், பிரியா அட்லீ மற்றும் கே பூர்ணா சந்திரா ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
இப்படத்தில் வினோத் கிஷன் பார்வை குறைபாடு உள்ள நபராக நடித்துள்ளார். அர்ஜுன் தாஸ் தோல்வியடைந்த ஒரு கிரிக்கெட் வீரராக, மாணவர்களுக்கு கிரிக்கெட் கோச்சாக நடித்துள்ளார். இது மட்டுமின்றி படத்தில் டாக்டர் இந்திரன் மற்றும் பூஜா நடிப்பு அருமை. அந்தகாரம் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. நெட்ஃபிலிக்சிலும் இப்படம் டாப் 10 ட்ரெண்டிங்கில் இடம் பெற்றுவிட்டது.
இந்நிலையில் படம் மாபெரும் வெற்றி அடைந்ததை அடுத்து படத்தின் தயாரிப்பாளர் அட்லீ, பிரியா அட்லீ, இயக்குனர், அர்ஜுன் தாஸ், வினோத் கிஷான் உள்ளிட்ட படக்குழுவினர் நடிகர் கமல்ஹாசனைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளனர்.
அந்தப் புகைப்படத்தை வெளியிட்ட அட்லீ “அந்தகாரம் குழுவிற்கு கமல்ஹாசன் சாரின் ஆசீர்வாதம் கிடைத்தது. எப்போதும் எங்களுடன் இருப்பதற்கும், எங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் மிக்க நன்றி சார். உங்கள் வார்த்தைகள் எப்போதுமே புதியவற்றைச் செய்ய எங்களுக்கு ஊக்கத்தை அளித்து வருகின்றன” என தெரிவித்துள்ளார்