பாலிவுட் நடிகர் ஆசிஃப் பஸ்ரா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 52.
‘ஜப் வீ மெட்’, ‘ஒன்ஸ் அபான் எ டைம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் ஆசிஃப் பஸ்ரா, தமிழில் ‘அஞ்சான்’ திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ‘அவுட்சோர்ஸ்’ என்கிற ஹாலிவுட் படத்திலும், ‘பாதாள் லோக்’, ‘ஹாஸ்டேஜஸ்’ ஆகிய வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார்.
இமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலாவில், மெக்லியோட் கன்ஜ் என்கிற இடத்தில் கடந்த சில வருடங்களாக வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியிருந்தார். அவர் தோழியும் அந்த வீட்டில் அவருடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.
வியாழக்கிழமை அன்று, தான் தங்கியிருந்த வீட்டில் ஆசிஃப் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தடயவியல் நிபுணர்களும், காவல்துறையினரும் இதை விசாரித்து வருவதாக காவல்துறை அதிகாரி கங்கறா விமுக்த் ராஜன் தெரிவித்துள்ளார்.