ராஜ்கமல் நிறுவனம் பெருமையுடன் வழங்கும் கமல் ஹாசன் 232 படத்தின் பெயர் “விக்ரம்”. இந்திய சினிமாவின் விஸ்வரூப நாயகனுடன், மாஸ்டர் , கைதி போன்ற வெற்றிகரமான படங்களை, தன்னுடைய குறுகிய கால திரைப்பயணத்தில் சாதித்திருக்கும் இளம் திறமையாளர், கரம் கோர்க்கும் போது, திரையில் வரப்போவது திரைப்படம் அல்ல. சினிமா ரசிகர்களுக்கான கொண்டாட்டம்.
சிகரம் தொட்ட சாதனையாளரின் திறமையும், இன்னும் பல வெற்றிகளை சாதிக்கத் துடிக்கும் இளமையும் இணையும் இந்த பிரம்மாண்ட முயற்சி, நிச்சயம் உங்களைக் குதூகலிக்கச் செய்யும்.சினிமா ரசிகர்களுக்கான 2021ம் ஆண்டின் மிகப்பெரும் திருவிழாவை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதில் பெருமை கொள்கிறது ராஜ்கமல் பிலிம்ஸ் (RKFI) நிறுவனம். கலை ஞானி, உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் , வெற்றிகரமான இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், Rock Star அனிருத் இசையில் திரையரங்குகளை கோலாகல திருவிழாவாக்கிட தயாராகி வருகிறது Kamal Haasan 232 என்று தற்போது பெயரிடப்பட்டுள்ள இந்த படைப்பு
.
RKFI ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் (“RKFI”), 1981ம் ஆண்டு ‘ராஜபார்வை’ உடன் தன் பயணத்தை தொடங்கி அபூர்வ சகோதரர்கள் மூலம் அதிசயிக்க வைத்து, இன்றைய தலைமுறையும் கொண்டாடும் சத்யா, தேவர்மகன், குருதிப்புனல், இந்திய சினிமாவின் சரித்திரத்தில் மைல்கல் முயற்சியான ஹே ராம், விருமாண்டி, விஸ்வரூபம், வயிறு குலுங்க சிரிக்க வைத்திடும் சதிலீலாவதி என தமிழ் சினிமா வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த திரைப்படங்களுடன் தன் பயணத்தை தொடர்கிறது. தமிழ் சினிமாவை, இந்திய சினிமா தாண்டி உலக சினிமா தரத்திற்கு கொண்டு சென்றிடும் தன் முயற்சியில் புதிய தொழில் நுட்பங்களான Dolby Stereo sound குருதிப்புனல் திரைப்படத்திலும், திரைக்கதை எழுதும் மென்பொருளை மருதநாயகம் திரைப்படத்திலும், Auro 3D தொழில் நுட்பத்தை விஸ்வரூபம் திரைப்படத்திலும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. சினிமாவைக் கொண்டாடி, ரசிகர்கள் கொண்டாடும் சினிமாவை தயார் செய்யும் ராஜ்கமல் நிறுவனத்தின் அடுத்த படைப்பு இது.
ரசிகர்கள் கொண்டாடும் உலக நாயகன் கமல் ஹாசனின் 232வது திரைப்படம் இது. மாஸ்டர், கைதி, மாநகரம் என வெற்றிப்படங்களை துவக்கமாய் வைத்து முன் வந்திருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தன் வண்ணக் கனவை, எழுத்தாக்கினால், அதை படமாக்கி, தியேட்டர்களை திருவிழாவாக்க முடியும் என சாதித்து காண்பித்து இருக்கும் இளம் திறமையாளர். தான் இயக்கிய மூன்று படங்களிலேயே தமிழ் சினிமாவின் நாளைய பக்கத்தில் தனக்கென தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் கலைக்கு சொந்தக்காரர். உலக நாயகனின் தீவிர விசிறியான இவர், தன் ஆதர்ச நாயகனைப் போலவே சினிமாவின் மீதான காதலுக்காக சிரமமோ, நேரமோ பாராமல் தன் சினிமாவை செதுக்கிடும் கலைக்காதலர். திரையில் தான் கொண்டாடிய உலக நாயகனுடன், தன் நான்காவது திரைப்படத்தில் கைகோர்த்து 2021 ஆம் ஆண்டின் மிகப்பெரும் திருவிழாவை படைத்திட தயாராகி வருகிறார்.
இந்நிலையில் இன்று (அக்டோபர் 07) உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பெயர் “விக்ரம்” என அறிவித்துள்ளனர். மேலும் படத்தின் டீஸர் வெளியிட்டுள்ளனர். வெறித்தனமானக உள்ளது டீஸர். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.