நடிகர் தனுஷ் கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். ஏற்கனவே இந்தியில் ராஞ்சனா, அமிதாப்பச்சனுடன் ஷமிதாப் படங்களில் நடித்துள்ளார். தற்போது மீண்டும் ‘அத்ரங்கி ரே’ என்ற புதிய இந்தி படமொன்றில் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் ஆனந்த் எல்.ராய் இயக்குகிறார். தனுஷ் ஜோடியாக பிரபல இந்தி நடிகை சாரா அலிகான் நடிக்கிறார். அக்ஷய்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். தமிழிலும் இந்த படத்தை வெளியிடுகிறார்கள். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இந்நிலையில், நடிகர் தனுஷ் ‘அத்ரங்கி ரே’ படத்தில் ஒரு பாடலை பாடி இருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள தனுஷ், ‘இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடியதும், அவருடன் பேசியதும் இனிமையான தருணம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
தனுஷ் இதற்கு முன்னர் பல படங்களில் பாடியிருந்தாலும் ஏ.ஆர்.ரகுமான் இசையில் இப்போது தான் முதன்முதலாக பாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.