கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் சேதுராமன். அதன்பின் நடிகர் சந்தானுத்துடன் “வாலிப ராஜா, சக்கை போடு போடு ராஜா” போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் மட்டுமில்ல, சென்னையின் தலைசிறந்த தோல் சம்மந்தப்பட்ட மருத்தவர்களில் ஒருவரும் கூட. இவர் எம்.பி.பி.எஸ்., எம்.டி படித்த தோல் சிகிச்சை நிபுணர். முடி உதிர்வது பற்றி இவர் கூறிய எளிய வழிகள் இளைஞர்கள் மட்டுமின்றி அனைவராலும் பாராட்டுப் பெற்றுள்ளது.
இந்நிலையில் நடிகர் சேது ராமன் (மார்ச் 26) அன்று மாரடைப்பு காரணமாக காலமானார். இவரது இறப்பு செய்தியை கேட்டதும் தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி அனைவருமே அதிர்ச்சியில் உறைந்தனர். ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அதில் நடிகரும் சேதுராமனின் நெருங்கிய நண்பனுமான சந்தானம் இவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். மேலும் கண்ணீருடன் சேதுராமனின் உடலை சுமந்து சென்றார் சந்தானம். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிக வைரலாக பரவியது.
இந்த நிலையில் சேதுராமன் இருக்கும் போது ஈசிஆர் சாலையில் மருத்துவமனை ஒன்றை கட்டி வந்ததாகக் கூறப்பட்டது. அந்த மருத்துவமனையின் பணிகள் தற்போது முடிவுக்கு வந்து இன்று (அக்டோபர் 29) திறப்பு விழா நடைபெற்றுள்ளது.
இந்த மருத்துவமனையை தனது நண்பருக்காக நடிகர் சந்தானம் நேரில் சென்று திறந்து வைத்துள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை அவர் தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். நட்பின் அடையாளமாக மறைந்த தனது நண்பரின் புதிய மருத்துவமனையை துவக்கி வைத்த சந்தானத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.