‘லொள்ளு சபா’ நிகழ்ச்சி மூலம் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் இயக்குநர் ராம் பாலா. சந்தானம், ஜீவா, சுவாமிநாதன், யோகி பாபு, மனோகர் என இவர் அறிமுகப்படுத்திய அனைத்து நடிகர்களுமே இன்று தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரையைப் பதித்துள்ளார்கள்.
இயக்குனர் ராம்பாலாவை ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் மூலம் பெரிய திரைக்கு அழைத்து வந்த பெருமை நடிகர் சந்தானம் சேரும். முதல் பக்கத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இருவரும் அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் பணியாற்ற, அதுவும் பெரும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் அகில உலக சூப்பர்ஸ்டார் ‘மிர்ச்சி’ சிவா நடிக்கும் படத்தினை இயக்கவிருக்கிறார் ராம் பாலா.
மிர்ச்சி சிவா மற்றும் நிக்கி கல்ராணி இணையவுள்ள இப்படத்திற்கு “இடியட்” என பெயரிடப்பட்டுள்ளது. ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படம் முழு நீள நகைச்சுவை திரைப்படமாகும். தற்போது அந்த படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது.
மிர்ச்சி சிவா மற்றும் ராம் பாலா கூட்டணி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்டிப்பாக காமெடி சரவடியாக இருக்கும் என தங்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.